மெய்ப்பொருளை மெய்யுணர்வால் உணரினோ பொய்ப்பொருள்கள் போகும் புறம் - ஞானம், தருமதீபிகை 945

நேரிசை வெண்பா

உலகுயிராய் ஓங்கி உயர்ந்து பரந்து
நிலவு நிலையில் நிலையாய் - இலகுமொரு
மெய்ப்பொருளை மெய்யுணர்வால் மேவி உணரினோ
பொய்ப்பொருள்கள் போகும் புறம். 945

- ஞானம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உலகம் உயிர் இனங்களையுடைய து: இந்த உலகிற்கும் உயிர்களுக்கும் உயிராதாரமாய் ஒரு பொருள் நிலைத்துள்ளது; மெய்யான அப்பொருளை மெய்யுணர்வால் மேவியுணரின் பொய்யான புலைப்பொருள்களின் தொடர்பு அடியோடு ஒழிந்து போய் ஏகமான இன்பம் இனிது விளையும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

கண் எதிரே காணுகின்ற உலக நிலைகளைக் கொண்டு காணாத ஒரு தலைமைப் பொருள் உண்டு என்று யூகமாய்க் கருதியுணர்ந்து கொள்வது விவேகமாய் விளங்கி நின்றது. சீவகோடிகள் ஆண்மை பெண்மை என இருவகையில் அமைந்து பலவகை நிலைகளில் பரந்து விரிந்து இயங்கி வருகின்றன. இயற்கை நியமங்கள் எங்கணும் நன்கு நிகழ்கின்றன. கதிரவன் எழுதல், கலைமதி ஒளிர்தல், மழை பொழிதல், வளி வழங்கல் முதலிய தொழில்கள் யாவும் யாண்டும் இறையும் தவறாமல் முறையே நடந்து திகழ்கின்றன. இவ்வாறு எல்லாம் நெறியே நிகழ்ந்து வருதலால் இவற்றிற்கு மூலகாரணம் ஒன்று மேலான நிலையில் உள்ளது என ஓர்ந்து தெளிந்து கொள்கிறோம். மெய்யான இந்தத் தெளிவு தெய்வ ஞானமாய்ச் சிறந்து விரிந்து வருகிறது.

காட்சியால் கண்டு கருத்தால் கருதி அனுபவத்தால் உறுதி செய்து ஆதிமூல நிலைகளை மனிதன் தேர்ந்து வந்துள்ளான். தான் ஓர்ந்து உணர்ந்ததை உலகம் அறிய உணர்த்தி உய்தி புரிகிறான். கடவுள் உண்டு என்று காட்டுவதில் உலக அனுபவங்களை எடுத்துக் காட்டி உள்ளம் தெளிய ஒளி செய்து அருள்கின்றான்.

நேரிசை ஆசிரியப்பா

உடலின் தொழிலால் உயிருண்மை உணர்வாய்
நாற்றம் நுகர்ந்து நறுமலர் காண்பாய்
ஆற்றும் அசைவால் காற்றினை அறிவாய்
பொங்குதீ யுண்மை புகையால் தெரிவாய்
5. மண்டபம் கண்டு மயனுளல் துணிவாய் ;

பிள்ளையை நோக்கிப் பெற்றவள் உண்டென
உள்ளம் துணிந்தே உறுதிமீக் கொள்வாய்;
கண்ட மட்கலம் காணாக் குலாலனை
உண்டெனக் காட்ட உணர்வுகொண் டுறுவாய்
10. வெளியே தெரிந்த வெம்புகை நோக்கி

உள்ளே ஒருதீ உளதெனத் தெளிவாய்;
விளைபயிர் நிலையை விழியால் அறிந்தே
உழவன் ஒருவன் உளனென ஓர்வாய்;
இன்ன நிலைகளை இன்னவா றுணர்தல்போல்
15. உலக இயக்கம் ஒருமுதல் உண்மையை

நலனுற உணர்த்தும் நயம்நீ தெளிந்து
கலக மயக்கம் களைந்தே
அலகில் இன்ப அமைதியை அடைக.

எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் உளன் என்று நம்புவதால் மனிதனுடைய உள்ளம் உறுதி நலங்களை நாடி உயர்ந்து கொள்கிறது. சார்ந்த சார்புகளின் வண்ணமாய் மனிதன் நேர்ந்து வருகிறான். நல்லாரைச் சார்ந்தால் நல்லவனாயுயர்ந்து நலம் பல பெறுகிறான்; தீயோரைச் சேர்ந்தால் தீயவனாயிழிந்து தீமைகளையே அடைகிறான். எதை அடுத்தானே அதன்படியே மனிதன் ஆகி விடுதலால் சேரும் இனங்களைக் குறித்து மனம் கூர்ந்து ஓர்ந்து அவன் மிக எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.

நல்இனத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின்
அல்லற் படுப்பதுாஉம் இல். 460 சிற்றினம் சேராமை

நல்லவர் சேர்க்கை நலம் பல தரும்; தீயவர் தொடர்பு அல்லலே விளைக்கும் என வள்ளுவர் இவ்வாறு கூறியுள்ளார். நல்ல அறிவைக் கெடுத்து பொல்லாத புலைகளைப் புகுத்தித் தீயவர் கெடுத்து விடுவராதலால் அந்த இனத்தைத் தீயினும் தீயதாக வெறுத்து அயலே விலகி நயமாய் ஒதுங்கி விட வேண்டும்.

தீயாரைக் காண்பதுவும் தீது என்று ஒளவையார் இவ்வாறு அறிவுறுத்தியிருக்கிறார். தீயவர் தொடர்பு துயரங்களையே விளைக்குமாதலால் அவரை யாதும் எவ்வகையும் அணுகலாகாது.

Villainous company hath been the ruin of me. - Shakespeare

கெட்டவர் தொடர்பு என்னை அழித்துக் கொண்டிருக்கிறது என இது குறித்துளது. நீச இனம் நாசமே செய்யும்; அதனை அறவே விலகி ஈசனை எண்ணுக; அதனால் புண்ணியங்கள் பொங்கி எண்ணரிய இன்பங்கள் நன்கு விளைந்து வரும்.

இறைவன் ஒருவனே மெய்ப்பொருள். வேறு நிலைகள் யாவும் பொய்ப்புலைகளே எனத் தெளிந்து கொள்வதே சிறந்த ஞானமாகும். இத்தகைய ஞானத்தை அடைந்தவர் உத்தம ஞானிகளாய் ஒளி பெற்றுச் சித்த சாந்தியோடு திகழ்ந்து நிற்கின்றார்.

உலக நிலைகளை விலகிப் பரனையே கருதி உருகியுள்ளவருடைய உரைகளும் செயல்களும் உணர்வு நலங்களை உதவி உயிர்க்கு இனிய அமுதங்களாய்ப் பெருகி வருகின்றன.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

667 மெய்இல் வாழ்க்கையை மெய்எனக் கொள்ளுமிவ்
வையம் தன்னொடும் கூடுவ(து) இல்லையான்
ஐய னேஅரங்கா என்றழைக் கின்றேன்
மையல் கொண்டொழிந் தேன்என்தன் மாலுக்கே. 1

673 எத்தி றத்திலும் யாரொடும் கூடுமச்
சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்
அத்த னேஅரங்கா என்றழைக் கின்றேன்
பித்த னாயொழிந்தேன் எம்பிரா னுக்கே. 7 அழகிய மணவாளன்பால் பித்தன் எனல், குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி, முதல் ஆயிரம், நாலாயிர திவ்ய பிரபந்தம்

குலசேகரப் பெருமாள் என்னும் இவர் சேரநாட்டு மன்னன். உலகு உயிர்களுக்கெல்லாம் ஓர் இறைவன் உண்டென்று தெளிந்து திருமாலிடம் பெருமால் கொண்டு இவர் உருகியுள்ள நிலைகளை இவ்வுரைகளால் உணர்ந்து கொள்கிறோம். மெய்யறிவு மிகுந்தபோது வைய மையல்கள் ஒழிந்து போகின்றன; அவ்வுண்மையை இவருடைய வாய்மொழிகள் இங்கே தெளிவாய் விளக்கி நிற்கின்றன. அரிய பெரிய அரச செல்வங்களையும் இனிய சுகபோகங்களையும் வெறுத்துத் தனி முதலை நாடியுள்ளமையால் இவருடைய சித்தத்தின் பரிபக்குவத்தையும் தத்துவ ஞானத்தையும் உய்த்துணர்ந்து உவந்து வியந்து கொள்கிறோம்.

மெய்யுணர்வு தெய்வ ஒளியாய்த் திகழ்கிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jan-22, 3:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே