காஞ்சிபுரம் வரதர் குண்டு இட்லி

ஒரு முறை நாங்கள் காஞ்சிபுரம் சென்றிருந்தோம். ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தோம். ஹோட்டல் வைத்திருப்பவர் ஒரு ஜவுளி கடையையும் ஹோட்டலின் ஒரு மாடியில் வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் சில கோயில்களுக்கு சென்று வந்தோம். ஒரு நாள் காலை வரதராஜ பெருமாள் கோவில் சென்றிருந்தோம். தரிசனம் செய்துவிட்டு கோயிலை சுற்றி பார்த்துவிட்டு மதியம் 12 மணி அளவில் சற்று நேரம் அமைதியாக கோவில் பிராகாரத்தில் அமர்ந்தோம். அப்போது அருகே கோவில் பிரசாதங்களை கொண்டு வைத்து விற்பனை செய்தனர். பல வருடங்களுக்கு பிறகு காஞ்சிபுரம் இட்லியை அன்று தான் பார்த்தேன். பார்க்க, பழுப்பு நிறத்தில், மிகவும் பெரிதான அண்டாவிலிருந்து கவிழ்த்து வைத்தது போல் இருந்தது. நான் எவ்வளவு விலை என்று விசாரித்தேன்? 350 ரூபாய் என்றார்கள். அப்போதிருந்த ஆவலால் சரி என்று சொல்லி 350 ரூபாயை கொடுத்து அதை வாங்கிவிட்டேன். நல்ல வேலை எங்களிடம் பெரிய துணிப்பை இருந்ததால் அந்த காஞ்சிபுர இட்லியை ஒரு பிளாஸ்டிக் காகிதத்தால் சுற்றி பையில் வைத்துக்கொண்டோம். இதை தவிர லட்டு தட்டை புளியோதரை மற்றும் தயிர் சாதமும் வாங்கிக்கொண்டோம். இதை எல்லாவற்றையும் தின்ற பிறகு காஞ்சிபுரம் இட்லியை சாப்பிட இயலவில்லை. கனமுடன் இருந்த அதை பையுடன் எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம். ஒரு ஆட்டோவில் வைத்துக்கொண்டு ஹோட்டல் வந்தோம். ஹோட்டல் முதலாளி நன்கு மோப்பம் பிடித்துவிட்டு " ஆஹா கம கம என்று மிளகு இஞ்சியின் வாசனை அடிக்கிறது. காஞ்சிபுரம் இட்டிலி வாங்கி வந்தீர்களா?" என்று ஒரே போடாக போட்டார். அவருக்கும் சாப்பிட கொடுத்தோம். சிறிது எடுத்து கொண்டார். " என் கடை பட்டு சேலை மிகவும் ராசியானவை. கொஞ்சம் உள்ளே வந்து சேலைகளை பாருங்கள்" என்றார். நான் உடனே " என் மனைவி பட்டு சேலைகள் கட்டுவதில்லை" என்று சொன்னேன்.

பின்னர் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு நாங்கள் இருவரும் கொஞ்சம் காஞ்சிபுரம் இட்லியை எடுத்து உண்டோம். பிறகு காபி குடித்துவிட்டு மீதமுள்ள இட்லியை அறையில் வைத்துவிட்டு வேறு கோயிலுக்கு சென்றோம். அங்கும் பிரசாதம் கிடைத்தது. ஆனால் நாங்கள் எதையும் வாங்கவில்லை. இந்த காஞ்சிபுரம் இட்லி தீர்ந்தவுடன் மற்ற பிரசாதம் வாங்கலாம் என்று நினைத்தோம். வெளியில் எதையும் சாப்பிடவில்லை. எங்கள் நினைவு காஞ்சிபுரம் இட்லி மேல்தான் இருந்தது. இரவு அறைக்கு வந்து மீண்டும் காஞ்சிபுரம் இட்லியை சாப்பிட்டோம். கொஞ்சம் பொலபொலவென்று கெட்டியாக இருந்ததால் பக்கத்தில் ஹோட்டலில் தயிர் வாங்கிக்கொண்டு தயிருடன் சேர்த்து கொஞ்சம் காஞ்சிபுரம் இட்லியை சாப்பிட்டோம். இவ்வளவு சாப்பிட பின்பு கூட இன்னும் பாதிக்கு மேல் இருந்தது. ஹோட்டல் பாய்ஸ் இருவருக்கும் கொஞ்சம் கொடுத்தோம். அவர்கள் குறைவாகவே எடுத்துக்கொண்டு போதும் என்று சொல்லிவிட்டனர்.

அடுத்த நாள் காலை சூடாக இட்லி பூரி ஏதாவது சாப்பிடலாம் என்று நான் சொன்னபோது என் மனைவி " காஞ்சிபுரம் இட்லியை யார் சாப்பிடுவது? " என்ற போது எனக்கு திடுக்கென்றது. என்ன செய்வது ? மீண்டும் கொஞ்சம் தயிர் தோசை மிளகாய் பொடி வாங்கி வந்தேன். அதனுடன் சேர்த்து இருவரும் காஞ்சிபுரம் இட்லி சிற்றுண்டி எடுத்தோம். வயிறு ஒரே கனமாகி விட்டது. அதன் பிறகு நல்ல சூடான பில்டர் காபி குடித்தோம். வயிறு இருவருக்கும் கனமாக இருந்ததால் வெளியே செல்கின்ற எண்ணமே வரவில்லை. மீண்டும் ரூம் பாய்ஸ் இருவரை அழைத்தோம். காஞ்சிபுரம் இட்லி எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் இருவரும் " தேங்க்ஸ் சார், நாங்கள் ஏற்கெனவே சிற்றுண்டி எடுத்துக்கொண்டோம். நீங்கள் நேற்று கொடுத்தது இன்னமும் இருக்கிறது" என்று சொல்லி விட்டு சிட்டாக பறந்துவிட்டனர். குளித்து சிற்றுண்டி முடித்து இரண்டு கோவில்களுக்கு செல்லலாம் என்றால் இந்த மாய இட்லியால் திட்டமே மாறிவிட்டது என்று நினைத்துக்கொண்டோம். மதியம் ஒருமணி ஆகிவிட்டது. எங்களுக்கு அதிகம் பசி இல்லை.பின்னர் அரை மணி நேரம் கழித்து மீண்டும் தயிர் வாங்கி வந்து மிளகாய் பிடியுடன் காஞ்சிபுரம் இட்லி சாப்பிட்டோம். இவ்வளவு சாப்பிட பின்பும் இன்னும் ஒரு பாதி காஞ்சிபுர இட்லி அப்படியே இருந்தது. அதை அப்படியே பிளாஸ்டிக் உறையால் மூடி பையில் வைத்துக்கொண்டு தெருக்கோடிக்கு சென்று அங்கு இருந்த நான்கு பிச்சை காரர்களுக்கு கொடுத்தேன். அவர்கள் என்னை கொஞ்சம் முறைத்து பார்த்தனர். ஒருவர் " இதை நேற்று நீங்கள் வாங்கி , சாப்பிட்டது போக மீதியை இன்று எங்களுக்கு தருகிறீர்கள். என்ன நியாயம் சாமி?' என்று கேட்டார். நான் சமாளித்தபடியே " அப்படியெல்லாம் இல்லை ஆசை பட்டு முழு இட்லியையும் வாங்கிவிட்டேன். இவ்வளவு பருமனாக அது இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. இதோ 400 ரூபாய் இதையும் வைத்துக்கொள்ளுங்கள்.ஆனால் கடவுள் பிரசாதம் என்பதால் வீணடிக்காமல் தயவு செய்து சாப்பிட்டு விடுங்கள் " என்று நான் பரிதாபமாக சொன்னபோது அவர்கள் ( பணத்தையும் பெற்றுவிட்ட மகிழ்ச்சியில்) " அதெல்லாம் கவலையே படாதீங்க சாமி. வரதராஜ பெருமாள் பிரசாதம் சாப்பிட கொடுத்து வைக்க வேண்டும்" என்று சொல்லியபடி எனக்கு நன்றி தெரிவித்தனர்.

நான் மீண்டும் ஹோட்டல் திரும்பினேன். பின்னர் இருவரும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டோம். அதன் பின் காபி குடித்துவிட்டு இரண்டு கோயில்களுக்கு சென்றோம். ஆனாலும் இரவில் இருவருக்கும் சாப்பிடவேண்டும் என்ற பசியே இல்லை. இருவரும் சூடாக பால் குடித்து விட்டு உறங்கிவிட்டோம். என் கனவில் நாங்கள் இருவரும் காஞ்சிபுரம் இட்லியை ஒரு தள்ளு வண்டியில் வீதி வீதியாக விற்றுக்கொண்டு செல்வது போல் கனவு கண்டேன். (அதில் எவ்வளவு விற்றது? என்ன வருமானம் ? மீதி எவ்வளவு இட்லி மீதி இருக்கிறது? இந்த விஷயங்களையெல்லாம் கேட்காதீர்கள்.)

விடிகாலை நான்கு மணிக்கு எனக்கு முழிப்பு வந்தது. எழுந்தவுடன் அந்த பெரிய பையை திறந்து பார்த்தேன். காலியாக இருந்தது. உடனேயே என் வயிறும் மனமும் நிறைந்தது. அன்று காலை நானும் என் மனைவியும் மீண்டும் கலகல என்ற வயிறுடன் இட்லி ( ஒண்ணும் பயப்படவேண்டிய அவசியமில்லை. இது உளுந்து இட்லி தான், மிளகு சுக்கு இஞ்சி இதெல்லாம் இல்லாமல்) பூரி என்று சாப்பிட ஆரம்பித்தோம். பின்னர் மீண்டும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று தொழுதுவிட்டு கோவிலை நன்றாக சுற்றிவிட்டு, பிரசாதம் ஏதும் வாங்காமல் வெளியே வந்து பக்கத்தில் உள்ள ஆலயத்திற்குள் நுழைந்தோம்.

பட்டு பூச்சிகளை அழித்து நெசவு செய்யப்படுவதால் என் மனைவி பட்டு சேலைகள் அணிவதை விட்டு பல வருடங்கள் ஆகிறது. பிரசித்தி பெற்ற கஞ்சி பட்டு சேலைகளை வாங்குவதும் இல்லை. இப்போது இந்த வரிசையில் காஞ்சிபுரம் இட்லியையும் இனி வாங்குவதில்லை என்றும் தீர்மானம் எடுத்துவிட்டோம். ஆனால் இட்லி மீதோ சாமி மீதோ கொஞ்சம் கூட கோபம் இல்லை!

(அட, காஞ்சிபுரம் இட்லியை மொத்தமாக வாங்காம கொஞ்சம் வாங்கி சாப்பிடுங்கள் என்று நீங்கள் கரிசனத்துடன் சொல்வது நிச்சயம் என் காதில் விழுகிறது. நான் உங்கள் அன்பு கட்டளையை என்றேனும் ஒரு நாள் நிச்சயமாக நிறைவேற்றுவேன்).

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (19-Jan-22, 5:16 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 77

மேலே