எல்லாம் உணருங் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ புணரும் ஒருவர்க் கெனின் - நாலடியார் 144

நேரிசை வெண்பா

நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை
பல்லவர் தூற்றும் பழியாகும்; - எல்லாம்
உணருங் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ,
புணரும் ஒருவர்க் கெனின்? 144

- குடிப்பிறப்பு, நாலடியார்

பொருளுரை:

உயர்குடிப் பிறந்தார் நற்காரியங்கள் செய்தால் அஃதவர்க்கு இயல்பென்று. கொள்ளப்படும். தீயவை செய்தால் பலருந் தூற்றும் பழியாக முடியும்;

அவ்வாறானால், உயர்குடிப்பிறப்பு ஒருவர்க்கு வாய்க்குமாயின் எல்லா நன்மைகளும் இயல்பாகவே உணர்ந்தொழுகுதற்குரிய தகுதி வாய்ந்த அக்குடிப் பிறப்பினால் அவர் அடையும் ஊதியந்தான் யாதோ!

கருத்து:

நல்லவை செய்தலை இயல்பாக உடையது உயர்குடிப் பிறப்பெனின் அந்நிலையே ஆக்கம் என்பது.

விளக்கம்:

பல்லவர் என்னும் மிகுதிப்பாடு, தீயவை சிறிது செய்யினும் என்னும் பொருட்குறிப்பு உணர்த்திற்று.

எல்லாம் உணரும் என்றது, குடிப்பிறப்பின் சிறப்பியல்பு உணர்த்திற்று.

ஊதியமென்னோ என்றது, அதனினும் ஊதியம் மற்றென்னோ என்னும் உட்கோளுடையது.

புணரும் ஒருவர்க்கெனின் என்றது, அதன் அருமை தோன்ற நின்றது.

இச்செய்யுள்,பழித்தது போலப் புகழ்தலாய்க் குடிப்பிறப்பின் உயர்வை விளக்கிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jan-22, 9:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

மேலே