இவையாறும் பாற்பட்டார் கொண்டொழுகும் பண்பு - ஏலாதி 13

நேரிசை வெண்பா

விளையாமை யுண்ணாமை யாடாமை யாற்ற
உளையாமை யுட்குடைத்தா வென்று - களையாமை
நூற்பட்டார் பூங்கோதாய் நோக்கி னிவையாறும்
பாற்பட்டார் கொண்டொழுகும் பண்பு 13

- ஏலாதி

பொருளுரை:

நூலினாற் கோக்கப்பட்டு நிரம்பிய மலர்மாலை யணிந்த கூந்தலை யுடைய பெண்ணே!

ஆராயின், உழவாற் பயிர் விளைக்காமையும், ஐம்பொறிகள் களிப்புற வுண்ணாமையும்,

பயனில் சொற்களைப் பேசாமையும், பிறரால் விளையுந் தீமைகட்கு மிகவும் வருந்தாமையும்,

நாணந் தருவனவற்றை வெல்லுதலும், மேற்கொண்ட ஒழுக்கங்களை விட்டு விடாமையும் ஆகிய இவை ஆறு ஒழுக்கங்களும் துறவின் பாற்பட்டார் மேற்கொண்டு ஒழுகும் இயல்புகளாம்.

கருத்து: விளையாமை முதலியன துறவற வழிப்பட்டாரொழுகும் பண்புகளாம்.

விளையாமை - பிறர்க்கு ஊறு செய்யாமை; உண்ணாமை - எதனையும் பற்றொடு நுகராமை என்பாருமுளர்.

நூலிற் கோக்கப்படுங்காற் பேரரும்பாய்க் காணப்பட்டுப் பின் மலர்தலின், ‘நூற்பட்டார் பூ' எனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jan-22, 12:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே