தக்க நெறியிடைப் பின்னும் செலப்பெறார் ஒக்கலை வேண்டி அழல் - பழமொழி நானூறு 46

இன்னிசை வெண்பா

முகம்புறத்துக் கண்டால் பொறுக்கலா தாரை
அகம்புகுது மென்றிரக்கும் ஆசை இருங்கடத்துத்
தக்க நெறியிடைப் பின்னும் செலப்பெறார்
ஒக்கலை வேண்டி அழல். 46

- பழமொழி நானூறு

பொருளுரை:

தம் முகத்தைப் புறத்தே கண்டாலும் மனம் பொறுத்துக் கொள்ளாதவர்களை அவர் மனத்தில் புகுவோம் என்று தாழ்மையாக நினைக்கும் விருப்பமானது,

தகுதியான நல்ல வழியிலே தொடர்ந்து தானாக செல்லப் பெறாத குழந்தைகள் பெரிய பாலை நிலத்தின் வழியே பெற்றோர் அவர்தம் இடுப்பில் தூக்கிச் செல்ல விரும்பி அழுவதற்கு ஒப்பாகும்.

கருத்து:

பகைவரது மனத்தை வேறுபாடின்றி ஒழியுமாறு திருத்துதல் இயலாத ஒன்றாம்.

விளக்கம்:

புறங் கண்டளவிலேயே பொறாதார் அகத்தால் ஒருகாலும் ஒத்தல் இலர்;

நல்ல வழியிலே செல்ல முடியாத குழந்தைகள் பாலை நிலத்தில் புறம் பற்றி வர நினைத்து அழுமாற்றை அஃது ஒக்கும். இச்செயல் இயலாத ஒன்றென்பதாம்.

மனமொன்று படுவோம் என்று நினைப்பதை 'அகம்புகுதும்' என்று சொல்லப்படுகிறது.

'தக்க நெறியிடைப் பின்னும் செலப்பெறார் ஒக்கலை வேண்டி அழல்' என்பது பழமொழி.

ஒக்கல் - இடுப்பு. ஒக்கலை வேண்டி யழல் (பழ. 290).
Hip; side of the body;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jan-22, 12:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

சிறந்த கட்டுரைகள்

மேலே