அரசனும் இல்வாழ்வார் இல்வழி யில் – நான்மணிக்கடிகை 47

இன்னிசை வெண்பா

மழையின்றி மாநிலத்தார்க் கில்லை மழையும்
தவமில்லார் இல்வழி இல்லை தவமும்
அரச னிலாவழி1 இல்லை அரசனும்
இல்வாழ்வார் இல்வழி யில் 47

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

மழையில்லாமல் இப் பேருலகத்தின் மக்கட்கு நலமில்லை;

அம்மழை தானும் தவஞ் செய்தலில்லாதவர்கள் இருப்பிடங்களில் பெய்தலில்லை;

அவ்வியல்பினதான தவஞ்செய்தலும் செங்கோலரசன் இல்லாதவிடத்து நிகழ்தலில்லை;

அச்செங்கோலரசனும் குடிமக்கள் இல்லாதவிடத்து இலனாவான்.

கருத்து:

மழையில்லா விட்டால் உலகத்து மக்களுக்கு நலமில்லை; அம்மழையுந் தவமுடையார் இல்லாதவிடத்துப் பெய்தலில்லை; அத்தவஞ் செய்தலும் முறையான அரசனில்லாத நாட்டில் நிகழ்தலில்லை; அவ்வரசனுங் குடிகளில்லாத விடத்தில் இருப்பதில்லை.

விளக்கவுரை:

‘தவமிலார்' என்பதைத் தவமுடையார் என்றுரைப்பாருமுளர். ‘தவமிலா ரில்வழி' யென்பதில், இல், இருப்பிடத்தை யுணர்த்திற்று,

உலகத்திலுள்ள எல்லா நலங்களுங் குடி மக்களான இல்வாழ்வாரால் விளைதலின், ஏனைய மூன்று கருத்துகட்கும் அவரை ஏதுவாக உரைத்தார்.

‘வாழ்க்கை' என்பதே உலகத்தில் இல்வாழ்வார்க்கே உரியதாதல் நினைவு கூர்தற்குரியது.

((பாடம்) 1. அரசிலார் - இல்வழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jan-22, 12:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே