இரந்தார்க்கொன் றில்லென்றல் யார்க்கும் அரிது – நான்மணிக்கடிகை 49

இன்னிசை வெண்பா

சிறந்தார்க்(கு) அரிய செறுதலெஞ் ஞான்றும்
பிறந்தார்க்(கு) அரிய துணைதுறந்து வாழ்தல்
வரைந்தார்க்(கு) அரிய வகுத்தூண் இரந்தார்க்கொன்
றில்லென்றல் யார்க்கும் அரிது 49

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

நட்பிற் சிறந்தவர்களுக்கு தம் நண்பரைப் பிழை செய்த வழியுஞ் சினந்து நீக்குஞ் செயல்கள் இலவாம்;

உயர் குடியிற் பிறந்த மேலோர்க்கு எக்காலத்திலும் தமக்குத் துணையான சுற்றங்களை நீங்கி இன்ப வாழ்வில் வைகும் வகைகள் இல;

உணவின் பொருட் செலவைத் தமக்கென்றே அளவு செய்து வாழ்கின்றவர்களுக்கு பிறர்க்குப் பகுத்தளித்து உண்ணு நிகழ்ச்சிகள் இல;

ஈரநெஞ்சமுடையாரெவர்க்கும் தம்பால் வந்து இரந்து கேட்பவர்கட்கு ஒரு பொருள் இல்லையென்று மறுத்துக் கூறுதல் இல்லை.

கருத்து:

சிறந்த நண்பர்கள் தம்முள் ஒருவரையொருவர் சினந்து கொள்ளார்;
உயர்குடிப்பிறப்பினர் தம் இனத்தாரை நீங்கி வாழார்;

தமக்காகவே செலவு செய்கின்றவர்கள் பிறர்க்குப் பகுத்துண்டல் செய்வாரல்லர்; அருளுடையவரெல்லாரும் இரந்தார்க்கு இல்லையென்று சொல்லார்.

விளக்கவுரை:

‘அரிய' வென்பது பலவின் முற்றானமையின், ‘செறுதல்' ‘வாழ்தல்' ‘உண்டல்' என்பவற்றிற்குப் பன்மைப் பொருள் உரைத்துக் கொள்க.

‘எஞ்ஞான்று' மென்பதை ஏனையவற்றிற்குங் கூட்டிப் பிழை செய்த காலத்தும், இடுக்கான காலத்தும், செல்வம் மிக்க காலத்தும், வறுமையுற்ற காலத்துமெனக் கருத்துரைத்துக் கொள்ளல் சிறப்பாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jan-22, 4:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

சிறந்த கட்டுரைகள்

மேலே