மாயா நரையான் புறத்திட்ட சூடு - பழமொழி நானூறு 48

இன்னிசை வெண்பா

நிரைதொடி தாங்கிய நீடோள் மாற்கேயும்
உரையொழியா வாகும் உயர்ந்தோர்கட் குற்றம்
மரையாகன்(று) ஊட்டும் மலைநாட! மாயா
நரையான் புறத்திட்ட சூடு. 48

- பழமொழி நானூறு

பொருளுரை:

பெண் மான் தனது கன்றிற்குப் பால் அளிக்கும் மலைநாடனே! வரிசையாகத் தோள் வலயத்தைத் தாங்கிய நீண்ட தோளையுடைய திருமாலுக்கு பொருந்தியிருக்கும் குற்றங்கள் ஒருநாளும் விட்டு நீங்கா. ஆதலால், எல்லாவகையினும் உயர்ந்தாரிடத்துள்ள குற்றம் வெண்மையாகிய மாட்டின் மேல் இட்ட சூடுபோல் ஒருநாளும் மறையா.

கருத்து:

பெரியோர் செய்த குற்றம் மறையாது.

விளக்கம்:

வெண்மையான மாட்டின்மேல் இட்ட சூட்டினை அவ்வெண்மை நிறம் எடுத்துக்காட்டுதல் போல, அறிவுடையார் செய்த குற்றங்களையும் அவரறிவுடைமையே விளக்கிக் காட்டும். ஆகவே, அவை மறைதலொழிந்து பிறர்க்கு விளங்கித் தோன்றும் என்பதாம்.

'நரையான் புறத்திட்ட சூடு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jan-22, 12:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே