உன்னைநீ ஓர்ந்து தெளிந்தால் உலவாத பேரின்பம் நேர்ந்து நிறையும் நினை - ஞானம், தருமதீபிகை 947

நேரிசை வெண்பா

உன்னை மறந்தாய்; உலகமெலாம் ஓடியே
என்னமோ தேடி இனைகின்றாய்; - உன்னைநீ
ஓர்ந்து தெளிந்தால் உலவாத பேரின்பம்
நேர்ந்து நிறையும் நினை. 947

- ஞானம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உனது உண்மை நிலையை உணர்ந்து கொள்ளாமல் மறந்து விட்டு உலகம் எங்கும் பறந்து திரிந்து பலவும் தேடி வருந்தி யுழலுகின்றாய்; உன்னை நீ ஓர்ந்து தெளிந்தால் பேரின்பம் உன் எதிரே பெருகி வரும்; அதனை மருவி மகிழ்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

நான், நீ, அவன் என்பன முறையே தன்மை, முன்னிலை, படர்க்கைகளை உணர்த்தி வருகின்றன. தன்னைக் குறிக்கும் போது தனி மனிதன் நான் என்று சொல்லி வருவது இயல்பாயுள்ளது. நான் என்பது எதை? கை கால் முதலிய அவயவங்களையோ, உடலையோ அது குறிக்கவில்லை என்று தெரிகின்றது. உடலுள் இருக்கும் உயிரே நான் என்னும் சொல்லுக்குப் பொருளாயது. யான், எனது என வருவன அகமும் புறமும் மருவின.

உயிர் என்றும் அழிவில்லாதது; அறிவு மிகவுடையது; ஆனந்த நிலையது. ஆகவே சத்து சித்து ஆனந்தம் என யாண்டும் நிறைந்திருக்கும் அந்த ஆதிமூலப் பொருளின் ஞாதி என்பது நன்கு தெரிய வந்தது. பரப்பிரமமாகிய பெரிய சோதியிலிருந்து பிரிந்த சிறிய ஒளித் துளியே சீவன் என வெளிப்பட்டுளது. அணு முதலிய சில பெயர்களால் பேசப்படுகிறது. யாவும் காரணக் குறிகளாய்ப் பூரண நிலையில் அமைந்துள்ளன.

உயிர் -- உயிர்த்தலையுடையது.
சீவன் -- சீவித்து வருவது.
சேதனன் -- அறிவு நலம் அமைந்தது.
பசு - பாசத்தால் பற்றப்படுவது.
புற்கலன் - மேன்மை மிக்கது.
அணு -- நுண்ணிய நிலையது.
ஆன்மா -- வியாபகமானது.
கூத்தன் – கூத்தாடி போல்வது.

உடல் இயங்கி வருவதைக் கண்டுதான் உள்ளே ஒரு உயிர் உண்டு என்று உணர்ந்து கொள்கிறோம். நேரே கண்ணுக்குத் தெரியாமையால் இல்லை என்றும், உடலின் செயல்களை நோக்கி உயிர் ஒன்று உள்ளது என்றும் கடவுளைப் போலவே ஆன்மாவும் வாதிக்கப்படுகிறது. சூனியான்மவாதி, தேகான்மவாதி, இந்திரியான்மவாதி, அந்தக்கரணான்மவாதி, சூக்கும தேகான்மவாதி, பிராணான்மவாதி, விஞ்ஞானான்மவாதி, சமூகான்மவாதி என ஆன்மவாதிகள் இவ்வாறு வெவ்வேறு வகையில் நேர்ந்துள்ளனர். உலகநோக்கை விலகி அறிவு நோக்கில் நின்று ஆன்ம விசாரணை செய்ய நேர்ந்த மேன்மையான அறிவாளரும் இங்ஙனம் மாறுபாடாய் வேறுபட்டிருக்கின்றனர்.

கலி விருத்தம்

உளதில தென்றலின் எனதுட லென்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலிற் கண்படில்
உண்டிவினை யின்மையின் உணர்த்த வுணர்தலின்
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா. 1

- 006 பிரமாணவியல் மூன்றாஞ் சூத்திரம், சிவஞான போதம்

உயிரின் நிலைமை தலைமைகளை இது இனிது விளக்கியுள்ளது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

உயிரெனப் படுவ திந்த உடலின்வே றுளதாய் உற்றுச்
செயிருறும் இச்சா ஞானச் செய்திக ளுடைய தாகிப்
பயில்வுறும் இன்பத் துன்பப் பலங்களும் நுகரும் பார்க்கில்
துயிலொடும் அஞ்ச வத்தைப் படும்உண்மை துரியா தீதம். 1

- 019 பிரமாணவியல் - மூன்றாஞ் சூத்திரம், சிவஞான சித்தியார்

ஆன்மாவின் உண்மையை இது இங்ஙனம் உணர்த்தியுளது.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே. 4

- முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை. பத்தாம் திருமுறை, திருமந்திரம்

சீவனது நிலையை இது இவ்வாறு குறித்திருக்கிறது. உடலை வேங்கடம் - வேகின்ற கடம். என்றது. சீவன் உடலுள் நின்று கூத்தாடுதலால் கூத்தன் என நேர்ந்தான். சிவன் உலகக் கூத்தன்; சீவன் உடல் கூத்தன். அண்டக் கூத்தனும், பிண்டக் கூத்தனும் அறிய வந்து உரிய உறவு தெரிய நின்றது.

கடத்துள் காற்று நிறைந்துள்ளது; அது உடைந்தால் வாயு வானோடு கலந்து கொள்ளும். உடலுள் ஆவி உள்ளது; அது உடைந்தால் இவ்வுயிர் பரனோடு உறவாய் உறைந்து கொள்ளும், அசுத்த வாயு நல்ல ஆகாயத்தை அடையாது; வேறு வாயு மண்டலங்களையே விரவி அலையும். சுத்தமான ஆன்மாதான் பரிசுத்தனான பரமனை மருவும்; அசுத்தமுடையது அயலே மயலான பிறவிகளிலேயே வீழ்ந்து திரியும். மனம் தூய்மை தோய்ந்த போதுதான் மனிதன் தெய்வமாய் உயர்ந்து உய்தி பெறுகிறான்.

உண்மையான ஆன்மநிலையை மறந்து புன்மையான தேகம் முதலியவற்றைத் தான் என்று நம்பி மோகமடைந்து திரியும் மூடநிலையை உன்னை மறந்தாய்! என்றது. இந்த மூடமே பீடைகளுக்கெல்லாம் காரணமாய்ப் பிறவிகளை விளைத்து வருகிறது.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

தன்னை அறியா துடலைமுன் `தான்`என்றான்
தன்னைமுன் கண்டான் துரியந் தனைக்கண்டான்
உண்ணும் துரியமுன் ஈசனோ டொன்றாக்கால்
பின்னையும் வந்து பிறந்திடுந் தானே. 38

- எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்

உன்னை யறியா(து) உடலைமுன் நான்என்றாய்
உன்னை யறிந்து துரியத் துறநின்றாய்
தன்னை யறிந்தும் பிறவி தணவாதால்
அன்ன வியாத்தனம லன்னென் றறிதியே. 11

- எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை, பத்தாம் திருமுறை, திருமூலர்

தன்னை அறியாமையால் நேரும் அவல நிலையினைத் திருமூலர் இவ்வாறு பரிவோடு கூறியிருக்கிறார். வேறு பல கலைகளையும் ஆராய்ந்து உண்மையை அறிய முயலுகிற மனிதன் தன்னை அறிவதில் பின்னமாய்த் தாழ்ந்து நிற்பது ஆழ்ந்த மாய மயக்கமாய்ச் சூழ்ந்து நிற்கிறது. மருளும் இருளும் பொருளறியாது நின்றன.

இந்த மாய மோகங்கள் பலவகை நிலைகளில் புலைபடிந்துள்ளன. இருள், மருள், மயக்கம், மையல் என அஞ்ஞான நிலைகள் அமைந்து நிற்கின்றன. அறிவு, தெளிவு, துன்ப நீக்கம், இன்பப் பேறு என ஞான நிலைகள் நண்ணியிருக்கின்றன.

தனது உண்மை நிலையை உணராதிருப்பது இருள்;
தன்னை மாறாக எண்ணி நிற்பது மருள்;
மயங்கி மண்டி அலைவது மயக்கம்;
மயலோடு மறுகி யுழலுவது மையல்.
உரிய உயிரைக் கருதி எழுவது அறிவு:
அறிந்ததைத் தெளிந்து கொள்வது தெளிவு;
அத்தெளிவால் அல்லல் ஒழிவது துன்ப நீக்கம்:
அந்நீக்கத்தால் நேர்ந்த ஆனந்தம் இன்பப் பேறு.

ஆன்ம நிலையை மறந்து அவலமாயிழிந்து அலைவது அஞ்ஞானம்; அந்த ஈன மூடம் ஒழிந்த அளவு ஞானம் விளைந்து துன்பங்கள் ஒருங்கே நீங்கி இன்பங்கள் ஓங்கி வருகின்றன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

பிரமமாம் தனைம றந்த பேதைமை யேஅஞ் ஞானம்;
பரனிலை காணோம் என்று பகர்தலா வரண மூடல்;
நரனொரு கருத்தால் சீவன் நானென முளைத்தல் தோற்றம்;
குரவன்வாக் கியத்தால் தன்னைக் குறிக்கொளல் பரோட்ச ஞானம்.

தத்துவ விசாரம் செய்து சகலசந் தேக மும்போய்
அத்துவி தம்தான் ஆதல் அபரோட்ச ஞானம் ஆகும்;
கர்த்தனாம் சீவ பேதம் கழிவதே துக்கம் போகல்;
முத்தனாய் எல்லாம் செய்து முடிந்ததா னந்தம் ஆமே. 2 கைவல்லியம்

அஞ்ஞானம் முதல் ஆனந்தம் ஈறாகவுள்ள நிலைகளை இவை தெளிவாய்க் குறித்துள்ளன. குறிப்புகளைக் கூர்ந்து நோக்கித் தத்துவ விளைவுகளை உய்த்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

பொய்யான புலைகளை அறிய யாவரும் அவாவி அலைகின்றார்; மெய்யான நிலையை எவரும் உணருவதில்லை. இந்த வெய்யநிலை வைய மையலாய் மருவி வழிவழியே அழிதுயராய்ப் பெருகியது.

உலகப் பொருள்களை எல்லாம் கண் நேரே காண்கிறது; எதையும் கண்டு களிக்கும் இயல்புடைய அது தன்னைக் காணுவதில்லை; ஒரு கண்ணாடியைக் காண நேர்ந்தால் அப்பொழுது தன்னை எதிரே அது கண்டு மகிழ்கிறது. அதுபோல் எல்லாவற்றையும் அறிகிற அறிவு தனது உண்மை நிலையை உணர்வதில்லை; தெளிந்த ஞானம் ஆகிய கண்ணாடியை அடைந்த பொழுதுதான் தன்னை அறிந்து அது பேரானந்தம் அடைகிறது. இருளை நீக்கி ஒளி இன்பம் தருதல்போல் மருளை நீக்கி ஞானம் பேரின்பத்தை அருளுகிறது. ஊன நிலைகள் யாவும் அதனால் ஒழிகின்றன.

அரிய இனிய இந்த ஞானம் உதயம் ஆகவில்லையானால் பாச பந்தங்களில் வீழ்ந்து மனிதன் ஈனமாய் உழல்கின்றான்; அந்த ஈனப் புலையை ஒழித்துப் பேரின்ப நிலையை அருளுதலால் ஞானம் சீவ அமுதம் எனவும் தேவஒளி எனவும் புகழ்ந்து போற்ற வந்தது,

அஞ்ஞானம் பிறவிக்கு வித்து; அஞ்ஞானன் ஆன மனிதன் அவலமாயிழிந்து அலைகிறான்; இருள் ஒளியால் ஒழிவதுபோல் மருள் ஞானத்தால் ஒழிகிறது என்னும் இது இங்கே அறிய வுரியது.

மெய்யான ஆன்ம நிலையை ஒருவன் தெளிவாயுணர்ந்த பொழுது அவன் மெய்ஞ்ஞானி ஆகின்றான்; ஆகவே பாச மோகங்கள் யாவும் நீங்கி அதிசய ஆனந்தமாய்த் திகழ்கின்றான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)

அகமகமென்(று) அனைத்துயிரின் இடத்துமிருந்(து) அனவரதம்
உரைப்ப தாகி
நிகழொளியாய் ஆன்மதத் துவமான சொரூபத்தை
நினைத்தல் செய்வாம்;
திகழிதய குகையுறையும் தேவதையை விட்டயலே
தெய்வம் தேடல்
மிகவரிய கவுத்துவத்தை எறிந்துசிறு மணிதேடும்
வேட்கை போலாம். 1

இத்தனைநாள் மனமுத்தைத் துளைத்திலேன் இன்றுதுளைத்(து)
இயைந்த நூலால்
சித்திரமாய்க் கோத்தணிவன் முழுதுணர்ந்த தேசிகரால்
தெளிந்தேன் எல்லாம்
சுத்தபர மானந்தம் தோற்றுவிக்கும் நல்லறிவாம்
சோதி பெற்றேன்
மெத்தவிவன் நானெனதிங்(கு) இவைஎனும்பொய் உள்ஒழித்தேன்
மீண்டு நாடேன். 2

இலங்கியசிந் தாமணியாம் இதயமெனும் சரக்கறையில்
இருக்கும் போகம்
கலங்கலிலா விவேகியர்க்குக் கருதுபொருள் கற்பகம்போல்
கணத்தின் நல்கும்
துலங்குவிசா ரம்படைத்துப் பேதைமைபோய் நல்லறிவு
தோன்றி னோரை
விலங்குகவ சத்தோரை அம்புகள்போல் காமாதி
விகற்பம் தாக்கா. 3

- ஞானவாசிட்டம்

ஞானம் அடைந்தபோது சனக மன்னனுடைய ஆன்ம அனுபவங்களை இவ்வாறு மேன்மையாய் வெளியிட்டிருக்கிறான். தெளிந்த ஞானியின் வாய்மொழிகள் திவ்விய ஒளிகளாய் விளங்கி நிற்கின்றன. கூறியுள்ள சீவ சொரூபங்களின் உண்மைகளை நுண்மையாய்க் கூர்ந்து ஓர்ந்துணர்ந்து கொள்ள வேண்டும். கருதிய அளவு உறுதி நலங்கள் காண வருகின்றன

பரம் பொருளின் அரும் பொருளான ஆன்மா ஆகத்துள் உறைந்துள்ளது. மாய மோகங்கள் நீங்கித் தூய அதனை விவேகமாய்த் தெரிந்து கொண்டால் சோகம் எல்லாம் அடியோடு ஒழிந்து போகும்; ஏகமான பரமானந்தமே எதிரே பொங்கி எழும். உனது சொந்தமான அந்த இன்ப வெள்ளத்தில் தோய்ந்து சுகமாய் வாழுக; அவ்வாழ்வே ஆனந்த அதிசய வாழ்வாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jan-22, 4:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே