உள்ளத்தே ஆசை உறுமளவும் வன்பிறவி வெள்ளத்தே மீள விழுவரால் - துறவு, தருமதீபிகை 957

நேரிசை வெண்பா

உள்ளத்தே ஆசை உறுமளவும் வன்பிறவி
வெள்ளத்தே மீள விழுவரால் - உள்ளத்துள்
பற்றற்ற போதே பவமும் அறும்வித்து
முற்றற்றால் ஆமோ முளை. 957

- துறவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஆசை உள்ளத்தில் இருக்கும் வரையும் யாவரும் பிறவிக் கடலில் வீழ்ந்து பெருந்துயரங்களையே அடைவர்; விதை அழியின் முளை ஒழிதல் போல் பாசப் பற்றுகள் அடியோடு அற்றபோதுதான் நீசப் பிறவிகள் வேரோடு அழிந்தொழியும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பிறவி எவ்வழியும் வெவ்விய துயரங்களுடையது; அதனை அறவே விட்டு நீங்குவதே உயிர்க்கு மெய்யான உய்தியாம்; ஆசை அடியோடு அற்றாலன்றிப் பிறவி வேரோடு அறாது; ஆகவே பற்றுக்களை முற்றும் துறந்த துறவியே பிறவிக் கடலைக் கடந்து என்றும் பேராத பேரின்ப நிலையைப் பெறுகின்றான்.

இந்த உண்மையை எத்தனை வகையாக விரித்துத் தெளிவாக உரைத்தாலும், எவ்வளவு நூல்கள் எழுதி விளக்கினாலும் யாரும் உள்ளம் துணிந்து துறந்து போக மாட்டார். வழிவழியே பழகி வந்த வாசனையின்படியே உயிரினங்கள் ஒரு முகமாய் உழந்து வருகின்றன. தான் தோய்ந்த பழக்கத்தின்படியே வாழ்வு வாய்ந்து வருதலால் எந்த மனிதனும் அந்த வகையிலேயே வாழ்ந்து மாய்ந்து போகிறான். மாய மருளோடு மடிந்து மீளவும் பிறந்து மீளாத பிறவியிலேயே மீண்டும் சுழன்று வருகிறான். இந்த இயற்கை நியதியைக் கடந்து ஒருவனுக்கு மெய்ஞ்ஞான ஒளி தோன்றுமானால் அது மிகவும் வியக்கத்தக்கதாம். அரிய தவமும் பெரிய புண்ணியமும் ஊடுருவி வந்தவர்க்கே இந்தவாறு எளிதே மெய்யுணர்வு வெளியாகிறது. இத்தகைய தத்துவ ஒளி வீசியவுடனே எவனும் முற்றத் துறந்து முனிவன் ஆகிறான். ஞானமும் துறவும் வான ஒளிகளாகின்றன.

சீவக மன்னன் ஒரு நாள் மாலையில் எழில் நிறைந்த பொழில் ஒன்றில் உலாவி வந்தான். அங்கே ஒரு ஆண் குரங்கு பலாப்பழச் சுளைகளைத் தன் பெட்டைக்கு ஊட்டிக் கொண்டிருந்தது. அக் காவின் காவல்காரன் அக்கடுவனை விரட்டி விட்டு அக்கனியை எடுத்து உண்டான்; அதனைச் சீவகன் கண்டான். உடனே உலக வாழ்வை வெறுத்தான்; அரச செல்வங்கள் யாவும் துறந்து துறவியாக நேர்ந்தான். அவன் கண்டதும், கருதி நின்றதும், உறுதி பூண்டதும் துறவு கொண்டதும் அதிசயங்களாய் விளங்கின.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

சீவகன் சிந்தனை செய்தது.

இன்கனி கவரு மந்தி கடுவனோ டிரிய வோட்டி
நன்கனி சிலத னுண்ண நச்சுவேன் மன்ன னோக்கி
யென்பொடு மிடைந்த காம மிழிபொடு வெறுத்து நின்றா
னன்புடை யரிவை கூட்டம் பிறனுழைக் கண்ட தொத்தே. 127

கைப்பழ மிழந்த மந்தி கட்டியங் கார னொத்த
திப்பழந் துரந்து கொண்ட சிலதனு மென்னை யொத்தா
னிப்பழ மின்று போகத் தின்பமே போலு மென்று
மெய்ப்பட வுணர்வு தோன்றி மீட்டிது கூறி னானே. 128

மெலியவர் பெற்ற செல்வம் வேரொடுங் கீழ்ந்து வெளவி
வலியவர் கொண்டு மேலை வரம்பிகந் தரம்பு செய்யுங்
கலியது பிறவி கண்டாங் காலத்தா லடங்கி நோற்று
நலிவிலா வுலக மெய்த னல்லதே போலு மென்றான். 129

வேட்கைமை யென்னு நாவிற் காமவெந் தேறன் மாந்தி
மாட்சியொன் றானு மின்றி மயங்கினேற் கிருளை நீங்கக்
காட்டினார் தேவ ராவர் கைவிளக் கதனை யென்று
தோட்டியாற் றொடக்கப் பட்ட சொரிமதக் களிற்றின் மீண்டான். 131 சீவகசிந்தாமணி

தன் தந்தையைக் கொன்று விட்டு கட்டியங்காரன் என்னும் அமைச்சன் அரசைக் கவர்ந்து கொண்டான்; அவனை வென்று ஆட்சியை மீட்டிச் சீவகன் ஆண்டு வருகிறான். கடுவன் கையில் இருந்த கனியைச் சிலதன் கவர்ந்து கொண்டது தனது செயலை ஒத்துள்ளது என்று இக்குல மகன் கருதி, ’சீ இது என்ன உலக வாழ்வு! யாதும் நிலையில்லாதது; புலையாட்டமானது’ என்று வாழ்வை வெறுத்தான்; என்றும் நிலையான நித்திய முத்தியைப் பெறுவதே பேரறிவின் பயன் என்று உறுதி பூண்டு தெளிந்து உடனே துறவு பூண்டான்.

இந்த மன்னனுடைய துறவு நிலையை அறிந்ததும் நாடு முழுவதும் நைந்து நொந்தது. மனைவிமாரும் மக்களும் மறுகி அலறினர். அவர் யாவருக்கும் அறிவு கூறித் தேற்றினான். அரச பதவியைத் தலைமகனிடம் தந்துவிட்டுத் தனிநிலையில் ஒதுங்கினான். முற்றத் துறந்த முனிவர்களும் தவசிகளும் யோகிகளும் ஞானிகளும் இக் கொற்ற குரிசிலின் பற்றற்ற துறவின் அருமையை வியந்து புகழ்ந்தனர். பெரிய சுக போகங்க்ளில் மூழ்கியிருந்தவன் துறவியானவுடனே யாவும் அடியோடு மறந்து உள்ளத்தை ஒரு நிலையில் நிறுத்தி யோக சமாதியில் அமர்ந்தான்; பரமனோடு ஒருமையாய் மருவி நெடிய யோகத்தில் நெடிது நிலைத்திருந்தவன் முடிவில் பேரின்ப நிலையை அடைந்தான்.

கேவல மடந்தை முத்தித்திரு
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

கேவல மடந்தை யென்னுங் கேழ்கிளர் நெடிய வாட்கட்
பூவலர் முல்லைக் கண்ணிப் பொன்னொரு பாக மாகக்
காவலன் றானொர் கூறாக் கண்ணிமை யாது புல்லி
மூவுல குச்சி யின்பக் கடலினுண் மூழ்கி னானே. 519

பிரிதலும் பிணியு மூப்புஞ் சாதலும் பிறப்பு மில்லா
வரிவையைப் புல்லி யம்பொன் அணிகிளர் மாடத் தின்றேன்
சொரிமது மாலை சாந்தங் குங்குமஞ் சுண்ணந் தேம்பாய்
விரிபுகை விளக்கு விண்ணோ ரேந்தமற் றுறையு மன்றே. 520 முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி

நித்திய நிரதிசய ஆனந்தத்தை இவன் பெற்றிருத்தலை இவற்றால் அறிந்து கொள்கிறோம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jan-22, 4:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

சிறந்த கட்டுரைகள்

மேலே