அஞ்சும் செறிய அடக்கினால் தஞ்சமென வானுமிந்த மண்ணுமே வந்தடங்கும் - துறவு, தருமதீபிகை 958

நேரிசை வெண்பா

வஞ்சப் புலன்செய் வகைஅறிந்து மாறாமல்
அஞ்சும் செறிய அடக்கினால் - தஞ்சமென
வானுமிந்த மண்ணுமே வந்தடங்கும்; மெய்யின்பம்
தானெழுந்து நிற்கும் தழைத்து. 958

- துறவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

புலன்களால் விளையும் புலைகளை உணர்ந்து ஐம்பொறிகளையும் நெறியே அடக்குக; அவ்வாறு அடக்கினால் வானகமும் வையகமும் உன் பால் வந்து அடங்கி நிற்கும்; மெய்யான பேரின்பம் மேலோங்கி வரும்; அவ்வழியைத் தெளிந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பொறிகளின் வாயிலாய் வெறி கொண்டு திரிந்து தேக போகங்களை அவாவி அலைவதே மோக வாழ்வாய் யாண்டும் மூண்டுள்ளது. கொச்சையான இச்சை கொடிய கேடுகளாய் வருகிறது. எல்லா அல்லல்களுக்கும் மூல காரணம் ஆசையே. அது நெஞ்சுள் புகுந்தபோதே மனிதன் பஞ்சு படாதபாடு பட நேர்ந்தான். பேய்வாய்ப் பிள்ளையாய் நாய்வாய்ச் சேலையாய் ஆசை வாய்ப்பட்டவர் அல்லலடைந்து அலமந்து உழல்கின்றார்,

ஆசை நீங்கிய அளவு ஈசன் ஒளி அங்கே ஓங்கி எழுகிறது. நிராசை திவ்விய நீர்மையாய்ப் பேரின்பங்களை அருளுகிறது: துராசை வெவ்விய தீமையாய் வெந்துயரங்களையே விளைக்கிறது.

பிறவித் துன்பங்களை ஒழிக்க நேர்ந்தவராதலால் பொறிகளை அடக்கி அமர்வது துறவிகளின் இயல்பாய் அமைந்தது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

ஐவகைப் பொறியும் வாட்டி யாமையி னடங்கி யைந்தின்
மெய்வகை தெரியுஞ் சிந்தை விளக்குநின் றெரிய விட்டுப்
பொய்கொலை களவு காம மவாவிருள் புகாது போற்றிச்
செய்தவ நுனித்த சீலக் கனைகதிர்த் திங்க ளொப்பார். 226

- முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி்

ஐம்பொறிகளையும் அடக்கி உள்ளே மெய்யுணர்வு ஒளிவீச வெய்ய மருள் இருள் வெளியே விலகி ஒழியத் தவ ஒழுக்கங்களாகிய கிரணங்கள் கிளர்ந்து விளங்கப் பூரண சந்திரன் போல் ஞான முனிவர் பொலிந்து திகழ்வர் என இது உணர்த்தியுளது.

புலன்களை வென்றபோது மனிதன் அதிசய சோதியாய்க் துலங்கி நிற்கிறான். அந்த ஞான வீரனை வானமும் வையமும் வணங்கி வாழ்த்தி வருகின்றன. மண்ணோரும் விண்ணோரும் தேக போகங்களையே அவாவி அலைகின்றனராதலால் அவற்றை வெறுத்து ஆசையற்றுள்ள துறவிகளை அவர் வியந்து மதித்து புகழ்ந்து துதிக்க நேர்ந்தனர்

பிறவித் துன்பங்கள் ஆசையால் விளைந்தன என்று துறவி தெரிகின்றான்; தெரியவே அந்த அவாவை அறவே நீக்கி விடவே துன்பங்கள் யாவும் நீங்கி பேரின்ப நிலையை அவன் பெறுகின்றான்.

அவாஇல்லார்க்(கு) இல்லாகும் துன்பமஃ(து) உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். 368 அவா வறுத்தல்

தனக்கு யாதொரு துன்பமும் நேரலாகாது என்று எண்ணுகின்றவன் முன்னதாக என்ன செய்யவேண்டும்? என்பதை இது இனிது விளக்கியுள்ளது. முன்னம் ஆசை கொண்டிருந்தமையால் இப்பொழுது இந்தப் பிறவித் துயர்கள் மூண்டுள்ளன: இன்னும் அதைக் கொண்டால் மேலும் துன்பங்களே நீளும்; ஆதலால் உடனே அவாவை ஒழித்து விடு; விடின் அல்லல் யாவும் நீங்கி எல்லையில்லாத பேரின்பங்களை நீ அடைவாய் என வள்ளுவர் இவ்வாறு சீவர்களுக்கு உரிமையோடு போதித்திருக்கிறார்.

புயாபதி என்பவன் சுரமை நாட்டு மன்னன். சிறந்த அரச போகங்களை அனுபவித்து வந்தான்; வயது முதிர்ந்ததும் ஆட்சியை மக்களிடம் கொடுத்து விட்டுத் துக்கத் தொகுதிகளை ஒழித்துய்ய வேண்டும் என்று உறுதி மீக்கொண்டு துறவு பூண்டான் நிறைந்த திருவுடன் வேந்தனாயிருந்தவன் துறந்ததை அறிந்ததும் உலகம் வியந்து நின்றது. அரிய துறவினை அடைந்தவன் பெரிய முனிவர்களோடு கூடி ஆத்தும தத்துவங்களை ஆராய்ந்திருந்தான். அந்த ஆன்ம ஆய்வு ஆனந்தம் ஆயது.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)

பிறந்தவன் பொறிபுலக் கிவரு மப்புலம்
சிறந்தபின் விழைவொடு செற்றஞ் செய்திடும்
மறைந்தவை வாயிலா வினைக வீட்டினால்
இறந்தவன் பின்னுமவ் வியற்கை யெய்துமே. 2

பிறவிச்சக் கரமிது பெரிது மஞ்சினான்
துறவிக்கட் டுணிகுவன் றுணிந்து தூயனாய்
உறவிக்க ணருளுடை யொழுக்க மோம்பினான்
மறவிக்க ணிலாததோர் மாட்சி யெய்துமே. 3

காட்சியு ஞானமுங் கதிர்த்துத் தன்பொறி
மாட்சியை 1வெலீஇமனந் தூய னாயபின்
நாட்செய்து நவிற்றிய தியான வீதியான்
மீட்சியில் வீட்டுல கெய்தும் வீரனே. 4. முத்திச் சருக்கம், சூளாமணி

பிறவி கொடிய துயரங்களை யுடையது; பிழையான ஆசைகளால் அது விளைந்து விரிந்து வந்துள்ளது; பற்றுக்களை அறவே விட்ட துறவுதான் பிறவியை நீக்கிப் பேரின்பம் அருளுகிறது; முனிவர்கள் இனிது கூறியிருப்பதை இம்மன்னன் கேட்டு மகிழ்ந்திருக்கிறான்; உறுதியான துறவால் உய்தி பெற்றுள்ள இவனை ஞான வேந்து என வானவரும் புகழ்ந்து வந்தனர்.

மருளான மாய மையல்கள் மருவியுள்ள உலகக் காட்சிகளை ஒருவித் துறவிகள் உள்ளே நோக்குகின்றனர்; அது சுயமான தூய ஆன்மக் காட்சியாகி அதில் பேரின்பம் பெருகி வருகிறது;. அமைதியான அக நோக்கு அதிசய ஆனந்தங்களை ஆக்கி உலகம் thuதி செய்ய அருளுகின்றது!.

Inwardness, mildness and self-renouncement do make for man’s happiness. (Arnold)

உள்ளத் துறவு, அமைதி, அகநோக்கு ஆகிய இவை மனிதனுக்கு இனிய இன்பத்தைச் செய்தருளுகின்றன என்னும் இது இங்கே நன்கு அறிய வுரியது; அரிய இன்பம் அகத்திலுள்ளது.

உனது உண்மையான ஆன்ம நிலையை உள்ளே ஊன்றி நோக்கு; பேரின்ப வெள்ளம் பெருகி எழுவதை அறியலாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jan-22, 7:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே