உன்னைச் செதுக்கு உலகம் செழிக்கும்

உன்னைச் செதுக்கு உலகம் செழிக்கும்
=======================================
கிழக்கை வெளுத்துக் கிளம்பும் கதிரவன் கிரணமென
விழவே இயற்கை விரிக்கும் சிறகை விழிகளினால்
அழகாய் மகிழ்வாய் அமுதாய் தினமும் அருந்துதற்குப்
பழகா துறங்கிப் பதராய்க் கிடத்தல் படுகுழியே
**
அருவிகள் சேர்ந்து அழகுற பாயும் அவனிதனில்
குருவிகள் கூட குளுகுளுப் பாகக் குசுகுசுத்து
வருகிறத் துன்ப வழிகளில் மாற்றம் வகுத்தபடி
உருகிடப் பேசி உணவினைத் தேடி உயர்கிறதே!
**
மனிதனாய் மண்ணில் மலர்ந்திடும் வாழ்க்கை மறைவதற்குள்
புனிதமா யுன்னில் புதுமைகள் பூக்கப் புறப்படுவாய்
தனிமையில் வாடித் தவிப்பவர்க் கள்ளித் தருவதற்காய்
கனிவுடன் ஈயும் கருணையும் கொள்வாய் களிப்புடனே!
**
நேற்றைய வாழ்வில் நிகழ்ந்தவை யாவும் நிகழ்ந்ததுதான்
காற்றெனச் சாய்த்தக் கதைகளால் கண்கள் கசிந்ததுதான்
ஆற்றிட வொண்ணா அவலமும் நெஞ்சை அரிப்பதுதான்
மாற்றிட வெண்ணா மடமையைக் கொல்வாய் மகிழ்வுறவே
**
தன்னை மறந்தே தவறுகள் செய்யும் தலைக்கனத்தால்
தன்னை இழந்தே தவித்தவர் கோடி தரணியிலே
தன்னை யுணரும் தலைமுறை நீதான் தனித்துவமாய்
உன்னைச் செதுக்கு உலகம் செழித்து உருப்படுமே!!
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (28-Jan-22, 2:06 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 145

மேலே