முயலாது வைத்து முயற்றின்மை யாலே உயலாகா - நீதிநெறி விளக்கம் 50
நேரிசை வெண்பா
முயலாது வைத்து முயற்றின்மை யாலே
உயலாகா ஊழ்த்திறந்த என்னார் - மயலாயும்
ஊற்றமில் தூவிளக்கம் ஊழுண்மை காண்டுமென்(று)
ஏற்றார் எறிகால் முகத்து 50
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
அசைவின்றி நிற்குந் தன்மையில்லாத தூய விளக்கை ஊழ்வினையின் உண்மையைத் தெரிவோம் என்று கருதி வீசுகின்ற காற்றுக்கெதிரில் அறிவு கெட்டும் ஒருவரும் ஏற்றமாட்டார்.
அதுபோல, அறிவுடையார் பயன்தரும் காரியங்களைச் செய்யத்தாம் முயற்சி செய்யாமலேயிருந்து ஊழ்வினை வகையில் வரும் நன்மைகள் தாம் முயற்சி செய்யாமையால் வராமல் இருக்காது என்று கருதி, சும்மா இருக்க மாட்டார்.
விளக்கம்:
முயற்சியால் ஊழையும் வெல்லலாமென இதற்கடுத்த செய்யுளில் ஆசிரியர் கூறுவர்.
ஊற்றம் - நிலையுடையதாய் நிற்குந்தன்மை.
"ஊற்ற மிறு விளக்கம்" என்ற பாடங்கொண்டு, அசைவின்றி நிற்றலை ஒழிந்த விளக்கினை என்றுரைப்பாருமுளர்,
கருத்து:
எல்லாம் ஊழ்வினைப்படி ஆகும் என்று கருதி அறிஞர் வாளாவிருந்து முயற்சி செய்யாதிரார்.