செறிகாமம் பூட்டும் இயல்மாரன் மன்னரசால் மாண்பூப் புலகு – இன்னிலை 24
நேரிசை வெண்பா
அழுக்குடம்பு யாத்தசீர் மெல்லியலை யாணம்
முழுக்காட்டி மன்றின்முன் கைத்தாக் – குழீஇக்கூட(ல்)
என்னே செறிகாமம் பூட்டும் இயல்மாரன்
மன்னரசால் மாண்பூப் புலகு 24
– இன்னிலை
பொருளுரை:
எலும்பு நரம்பு முதலியவற்றால் கட்டப்பட்ட சிறப்புடைய அழுக்குப் பொருந்திய உடலுடைய மங்கையை பலவகைக் கூட்டுப் பொருள்களைப் பூசி நீராட்டுவித்து அலங்கரித்து அவையோர் முன் கைப்பற்றிக் கூட்டமாய்க் கொண்டு போய்ப் புணர்தல் என்ன வியப்பு!
நெருங்கிய காமத்தை ஆடவர் மகளிர் என்ற இரு திறத்தார்க்கும் பூட்டுகின்ற இயல்புடைய மன்மதனுடைய நிலைபெற்ற அரசாட்சியினால் மண்ணுலகமானது மாண்பாக உள்ளது.
கருத்து:
அழுக்குடம்புடைய பெண்ணை ஒருவன் அலங்கரித்து மணம் புரிந்து வாழ்கிறான். அதனால் உலகம் மேலும் மேலும் பெருகி நிலைத்து நிற்கிறது.
விளக்கம்:
எலும்பு, நரம்பு, தோல், குருதி, மூளை, கொழுப்பு, தசை இவைகளை ஒழுங்குடன் நிறுத்திக் கட்டுவது, எவராலும் முடியாத செயலாதலால் இது சிறப்புடையது என்பது தோன்ற "யாத்தசீர்" என்றார்.
சீர் - சிறப்பு என்ன சிறப்பு, எனின் யாத்த சிறப்பு. சீர் உடம்பு, அழுக்கு உடம்பு எனக் கூட்டிக் கருத்துக் கொள்ள வேண்டும்: