நன்னெஞ்சே செற்றத்தால் செய்வது உரை – அறநெறிச்சாரம் 66

நேரிசை வெண்பா

உழந்துழந்து கொண்ட உடம்பினைக்கூற் றுண்ண
இழந்திழந் தெங்கணுந் தோன்றச் - சுழன்றுழன்ற
சுற்றத்தார் அல்லாதார் இல்லையால் நன்னெஞ்சே!
செற்றத்தால் செய்வ(து) உரை, 66

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

நல்ல மனமே! முயன்று முயன்று நாம் அடைந்த உடல்களை எமன் உண்ண, பலகாலும் இழந்து எல்லாவிடத்தும் பிறத்தலால் உலக வாழ்க்கையில் நம்மொடு கூடிச் சுழன்று தடுமாறித் திரிந்த மக்களில் உறவினரல்லாதார் வேறொருவருமில்லை;

அப்படியிருக்க, பிறர் மேல் கொள்ளும் கோபத்தால் நீ செய்வது யாதோ? சொல்.

குறிப்பு:

கூற்று - உயிரினையும் உடலினையிம் கூறாக்கிப் பிரிப்பது எமன்.


“சுற்றிச் சுற்றிப் பார்த்தால் தோட்டியும் நமக்கு உதவுவான்” என்ற பழமொழிப் பொருளை ஈண்டுக் கொண்டு நோக்குக.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Feb-22, 3:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே