குமுறும் எரிமலையும் உருகும் பனிமலையும்

துருவங்கள் இரண்டுயென இயற்கையிலே இருக்கு
மறுத்தவிட முடியாது என்பதுதான் உண்மை –அதை
ஏற்றிக்கு வாழ்வதுதான் அனைவருக்கும் கடமை ! ****

இருளென்றும் பகலென்றும் இல்லாது இருந்திருப்பின்
உருவான உயிர்இனங்கள் வாழாது அழிந்திருக்கும் –அவை
வீழ்ந்த நிலை எதுவொன்றும் தெரியாமல் ஒழிந்திருக்கும்.

கொதிக்கின்ற பகலவனும் குளர்ச்சிதரும் வெண்ணிலவும்
தோன்றாமல் போயிருந்தால் புவியிதுவும் நிலைத்திருக்கா ?-பல
புதுமையெல்லாம் பிறந்திருக்க உள்ளமதும் மலைத்திருக்கா !

நேர்முனையும் எதிர்முனையும் இணைகின்ற போதிலன்றோ
மின்சாரம் எனும்சக்தி மனிதனுக்குப் பயன்தருமே ? –அதில்
மண்வளத்தைப் பெருக்கிவைத்து உயிர்களுக்குப் பலன்தருமே ?

ஆண்னென்றும் பெண்னென்றும் இருபாலர் இருப்பதனால்
இன்பமென்னும் ஊற்றெடுக்கும் இருபாலை இணைத்துவைக்கும்-பின்
இணைவதனால் பிறக்கின்ற உறவுதனைப் பெருக்கவைக்கும் !

விண்னெனவும் மண்னெனவும் இருதுருவம் தோன்றியதால்
விண்தவழும் மேகமெல்லாம் விரைந்திங்கே மழைபொழியும் –அம்
மழைதந்த நீர்வளத்தால் மண்ணெல்லாம் தினம் நெகிழும் !

இன்பமதும் துன்பமதும் இருதுருவம் ஆனாலும்
இணைந்துதானே மானுடரின் வாழ்வினிலே இருக்கும்அதை
உணர்ந்திடாமல் வாழ்ந்துவிடின் வேதனையைப் பெருக்கும்.

சினத்தோடு அன்பதுவும் சேர்ந்திங்கு இருப்பதனால்
குணமென்றால் எதுவென்று மாந்தருக்கு உணரவைக்கும்-அதை
நெஞ்சமதில் என்றென்றும் நிலையாக நிறுத்திவைக்கும்.******

கிழக்கென்றும் மேற்கென்றும் தெற்கென்றும் வடக்கென்றும்
கீழென்றும் மேலென்றும் திசையதும் இங்கிருக்கும் –அவை
ஒன்றோடு ஒன்றிணைய முடியால் தவித்திருக்கும்.

இணையாமல் இருந்தால்தான் பூமியது சுற்றிவந்து
இயறகை அதன் செல்வமதைக் கொண்டுவந்து சேர்க்கும்-அதுவங்கு
இல்லையெனின் புவியதுவும் தானழிந்து போகும்.

நெருப்பதுவும் நீரதுவும் போட்டிங்கு போட்டால்
பயிரினங்கள் அத்தனையும் உயிரிழந்து மாயும் –பின்
மண்வளங்கள் எல்லாமும் மெல்லெனவே தேயும் .******

குமுறுகின்ற எரிமலையும் உருகுகின்ற பனிமலையும்
புவியினிலே அழிந்தென்றும் போகாமல் தானிருக்கும் –அதை
வெறுத்தாலும் பொறுமையுடன் தன்செயலைச் செய்திருக்கும் !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (27-Feb-22, 11:57 am)
பார்வை : 51

மேலே