வெயின்முறுகப் புற்பனிப் பற்றுவிட் டாங்கு - நாலடியார் 171
நேரிசை வெண்பா
அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி
நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த
நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்
புற்பனிப் பற்றுவிட் டாங்கு. 171
- நல்லினம் சேர்தல், நாலடியார்
பொருளுரை:
அறிய வேண்டுவன அறியாத சிறுபருவத்தில் அடங்கியொழுகாத தீயோருடன் சேர்ந்து முறையல்லாதவற்றைச் செய்தொழுகிய தீயகுணங்களும் வெயில் கடுகுதலால் புல் பனியின் பற்றுதல் விட்டாற்போல நன்னெறி தெரிந்து ஒழுகும் உயர்ந்த பெரியோர் சார்பைச் சார்ந்து பழகுதலால் கெடும்.
கருத்து:
தீய குணங்கள் நீங்கும் பொருட்டு நல்லாரினத்திற் சார்ந்து பழகுதல் வேண்டும்.