ஏமாப் பொருவற்கு மக்கட் பிறப்பிற் பிறிதில்லை – அறநெறிச்சாரம் 72
நேரிசை வெண்பா
(ப், க் வல்லின எதுகை)
எப்பிறப் பாயினும் ஏமாப்(பு) ஒருவற்கு
மக்கட் பிறப்பில் பிறிதில்லை - அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின், 72
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
மக்கட் பிறப்பில் கற்றற்குரியவற்றைக் கற்றலும், கற்றவற்றைப் பெரியோரிடம் கேட்டுத் தெளிதலும், கேட்ட அந்நெறியின் வழியில் நிற்றலும் நல்ல முறையில் அமையப் பெற்றால்,
வேறு எந்தப் பிறப்பானாலும் மக்கட் பிறப்பினைப் போல ஒருவனுக்கு இன்பம் செய்வது வேறு ஒன்று இல்லை.