ஆவிக்கு இனியர் இணைசேரார் ஈர்ங்கண்மா ஞாலத் தனிமைக்கு அவரோர் கரி – இன்னிலை 26
நேரிசை வெண்பா
தூவி நெருஞ்சிக்காய் நீர்முள்ளி தும்பையலர்
காவியன சேற்கட் குறுந்தொடியார் – ஆவிக்(கு)
இனியர் இணைசேரார் ஈர்ங்கண்மா ஞாலத்
தனிமைக்(கு) அவரோர் கரி. 26
– இன்னிலை
பொருளுரை:
அன்னப்பறவையின் சிறகிலுள்ள மயிர்கள் நெருஞ்சிக் காய் முட்களாகவும் தும்பை மலர்கள் நீர் முள்ளியின் முட்களாகவும் தோன்ற மெல்லிய அடிகளையும், நீலமலரும் கெண்டை மீனும் போன்ற விழிகளையும் சிறிய வளையலையும் உடைய மகளிர் ஆடவரது உயிர்க்கு இனிமை தருவோராவார்;
அம்மகளிரைத் தமக்கு இணையாகக் கொண்டு கூடி வாழாதவர் குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகத்தில் தனிமை வாழ்வுக்கு அவ்வாடவர் ஒரு சான்றாவர்.
கருத்து:
மங்கையரை வாழ்க்கைத் துணையாக மணந்து வாழ்வதே சிறந்த வாழ்வு. அவ்வாழ்வே இன்பந் தருவது. அவரைக் கூடாத வாழ்வு தனிமையுடையது; துன்ப வாழ்வு.
விளக்கம்:
தூவி - மென்மையுடையது; தும்பைப் பூவும் மென்மையுடையது. இவ்விரண்டும் மகளிர் அடிக்கு நெருஞ்சி முள்ளாகவும், நீர் முள்ளியின் முள்ளாகவும் தோன்றும்.
தூவியின் மிதிக்கினும் தும்பை மலரின் மிதிக்கினும் நெருஞ்சி, நீர் முள்ளி மேல் மிதித்தது போல அழுத்தப்பட்டு வருந்தும் இயற்கையையுடைய அடியென விரித்துக் கொள்க.
"ஆவிக்கு இனியர்" என்ற குறிப்பினால் "ஆடவரது" என்ற சொல் வருவிக்கப்பட்டது.
இணைசேரார் தனிமைக்குக் கரி என்று கொள்க.
உலக வாழ்வு வாழ்க்கைத் துணையோடு கூடி வாழ்வதேயாம். தனித்து வாழ்வது வாழ்வாகாது.
இன்பத்திற்காகவே இவ்வுலகம் படைக்கப்பட்டது. குளிர்ந்தது; இடமகன்றது; பெரியது.
இத்துணைச் சிறப்புடைய வுலகத்தில் தனிமை வாழ்வு தக்கதன்று என்ற கருத்துத் தோன்றும்படி "ஈர்ங்கண் மா ஞாலம்" எனச் சிறப்பித்தார்.
விலங்குகளும், பறவைகளும் கூடியே வாழ்கின்றன. ஆதலால் அவைகளே அவர்களுக்குச் சான்றாவர் என்பது தோன்ற "அவர் ஓர் கரி" என்றார். வேறு சான்று உலகிற் காட்ட வியலாது என்பது கருத்து.