நாவிற்கு நன்றல் வசை - சிறுபஞ்ச மூலம் 10

நேரிசை வெண்பா

சிலம்பிக்குத் தன்சினை கூற்றநீள் கோடு
விலங்கிற்குக் கூற்ற மயிர்தான் - வலம்படா
மாவிற்குக் கூற்றமா ஞெண்டிற்குத் தன்பார்ப்பு
நாவிற்கு நன்றல் வசை 10

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

சிலந்திப் பூச்சிக்கு தன்னுடைய கருவாகிய முட்டையே எமனாகும்,

எருது முதலிய மிருகங்களுக்கு அவற்றின் நீண்ட கொம்புகளே எமனாகும்;

வெற்றி யுண்டாகாத கவரிமானுக்கு அதன் மயிரே எமனாகும்;

நண்டுக்கு தன்குஞ்சுகளே எமனாகும்;

ஒருவனுடைய நாவுக்கு தான் சொல்லும் நன்மையல்லாத பழிமொழிகள் எமனாகும்!

கருத்துரை:

சிலந்திப் பூச்சிக்கு அதன் முட்டையும், மிருகங்களுக்கு அவற்றின் நீண்ட கொம்புகளும், கவரிமானுக்கு அதன் மயிரும், நண்டுக்கு அதன் குஞ்சுகளும், ஒருவனுடைய நாவிற்கு தான் சொல்லும் வசை மொழியும் எமனாகும்.

சிலந்திப்பூச்சி முட்டையிட்டவுடன் தானழிதலால், ‘’சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்,’’ என்றும், விலங்குகட்கு நீண்ட கொம்பிருந்தால் அது மரங்கன் முதலியவற்றிற் குத்தி முறியப் பெற்று வருந்துமாதலாலும், எவர்மீதேனும் பட்டு ஊறு விளைக்கு மென்று அறுக்கப்படுமாதலாலும், நீள்கோடு விலங்கிற்குக் கூற்றம் என்றுங் கூறினார்.

கவரிமான் முட்செடி முதலியவற்றிற் பட்டுத் தன் மயிர் ஒன்று உதிர்ந்தால், ‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமா’, என்ற குறட்கிணங்க, அது தன் உயிரை விட்டு விடுமாதலால், ’மயிர் தான் வலம்படா மாவிற்குக் கூற்றம் என்றார்.

’நண்டு சிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்திற் கொண்ட கருவளிக்கும் என்றபடி நண்டு குஞ்சுகளை ஈன்றவுடன் அழிந்து போகுமாதலால், ‘ஞெண்டிற்குத் தன்பார்ப்பு’ (கூற்றம்) என்றார்.

பிறர் பழி கூறுவோன் அடையும் பயன் இம்மையில் இகழப்படுதலும், மறுமையில் எரிவாய் நிரயத்து அழுந்தலும் ஆதலால், ‘நாவிற்கு நன்றல் வசை,’ (கூற்றம்) என்றார். ஈற்றிலுள்ள கூற்றம் என்பதைத் தீபகமாக்கி ஞெண்டிற்கும் நாவிற்கும் கூட்டப்பட்டது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Mar-22, 1:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே