நாவகமே நாடின் நகை ஐந்து - சிறுபஞ்ச மூலம் 11

நேரிசை வெண்பா

நாணிலான் சால்பும் நடையிலான் நன்னோன்பும்
ஊணிலான் செய்யும் உதாரதையும் - ஏணிலான்
சேவகமுஞ் செந்தமிழ் தேற்றான் கவிசெயலும்
நாவகமே நாடின் நகை 11

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

நாணமில்லாதவனது அமைதியும், நல்லொழுக்கம் இல்லாதவனது நல்நோன்பும், தனக்கே உண் பொருளில்லாதவன் செய்கின்ற ஈகையும், வலிமையில்லாதவனது வீரத் தொழிலும், செந்தமிழில் தன் மனதைத் தெளியச் செய்யாதவன் பாட்டுக்களைச் செய்தலும் நாவினிடத்துக் கொண்டு ஆராயின் சிரிப்புக்கு இடமாகும்.

கருத்துரை.

நாணமில்லாதவன் அமைதி, நன்னடையில்லாதவன் நோன்பு, உண் பொருளில்லாதவன் ஈகை, வலிமையில்லாதவன் வீரம், செந்தமிழ்த் தேர்ச்சியில்லாதவன் கவி பாடுதல் என்னும் இவ்வைந்தும் பயனில்லை என்பதாம்.

சால்பு என்பது குணங்களால் நிறைந்த தன்மை;

சால்பினை ஆக்கங் குணங்கனைந்தனுள் நாணம் ஒன்றாதலாலும், இழிதொழிலைச் செய்ய நாணாத ஒருவனுக்குச் சால்புடைமை அமையாதாதலானும், ‘நாணிலான் சால்பு நகைதரும் என்றார்!

உதாரதை - பெருங்கொடைத் தன்மை, நடை - நன்னடை தேற்றான் - பிறவினை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Mar-22, 3:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

சிறந்த கட்டுரைகள்

மேலே