நெஞ்சத்துட் தீமை யெழுதருமேல் இன்னாதே – அறநெறிச்சாரம் 73

நேரிசை வெண்பா

கற்றதுவுங் கற்றொருபால் நிற்பக் கடைப்பிடியும்
மற்றொருபால் போக மறித்திட்டுத் - தெற்றென
நெஞ்சத்துட் தீமை யெழுதருமேல் இன்னாதே
கஞ்சத்துட் கற்பட்டாற் போன்று. 73

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

கற்கவேண்டிய நூல்களைக் கற்றதனாலான அறிவு ஒழுக்கத்திற் சேராது ஒருபுறம் நிற்கவும்,

எடுத்த கருமத்தை முடிக்கும் துணிவும் அந்நூற் துணிபுகளிற் மாறுபட்டு மற்றொரு புறஞ் செல்லவும்,

நல்வழியில் செல்வதைத் தடுத்து மனத்தில் தவறான தீய எண்ணந் தோன்றுமாயின், அது தின்னப் புகுந்த அப்ப வருக்கத்துள் பொருந்திய கல்லே போல மிகத் துன்பந் தருவதாகும்.

குறிப்பு: எழுதரல் - எழுதல்; கஞ்சத்துள் - அழகியதாய் மலர்ந்துள்ள தாமரைப் பூவில் எனலுமாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Mar-22, 7:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே