காதலி எனும் மனைவி

காதலித்தோம் கைப்பிடிக்க எண்ணி
காதலின் அகராதி அறியாமலே

புதுகிளர்வு கண்டஎன்மனது பறந்தது
புதுபைக்கில் மிதந்து வந்த அவனால்

கண்ணின் மணியாய்... காதலின்
துளியாய்... வாழ்வில் ஒளியாய் ...

மலர்ந்தோம் ...இவ்வுலகை மறந்தேன்
என் தலைவனின் காதல் மொழியில்..

எனக்காக எண்திக்கிலும் நின்றான்
தனக்காக எதுவும் வேண்டாம் நீயே...

என்உலகம் என்றான் ...காதலித்தோம்
அன்புடன் அழகையும் பறிமாறி ..

கட்டில் கண்டவனிடம் தொட்டில் கட்டும் வேளை தூரத்தில் இல்லை
என்றேன் ...

எட்டிநின்று என்னவென்றான் எனையே அள்ளித்தின்றவன் ...

பெற்றவள் பித்துக்குளி ஆனாள்
பெருமை பெற்றவன் நடைபிணமாய்
போனான்

நடைபிணம் பின்தொடர்ந்து பின்னால் சென்றேன் ...

முகம்கண்டே யென்அகம்காணும் அம்மாமனிதன் நயந்து சென்று

பேசினான்... அவனை பெற்றோர் உற்றோர் இடம்தனை தேடி நாடியே..

ஒரு சுபவேளையில் வாங்கினேன் தாலி அவன் கையால் ஊர்மெச்ச...

பின் வாழ்ந்தோம் பல ஆண்டுகளாக சிலஆண்டுகளையே சிகரமாக கருதி

பசிக்கு புசித்தவன்...
ருசிக்கு புசிக்கலானான் .

..பெண்மையை... கண்டு கேட்டால்
கடுஞ்சொல் உதிர்த்தான்

அஞ்சிநின்றது போதும் என அழைத்தேன் அவளை ..

...என்தலைவனை என்னிடம் இருந்து களவாடிய கள்ளி அவளை ....

மொழிந்தேன் ...அவளிடம்
வாழ்வின் இலக்கணம்

விரும்பி இணைந்தேன் அவனுடன் ..
வெதும்பி தருகிறேன் உன்னிடம்...
அவனையே ...

தேன் உண்ட வண்டு வேறு கூடு காணும் முன் விலகிவிடு என்று...

ஏனெனில் அவளும் பெண்தானே
என் வேதனை அவள் அறிய கூடாதே
என்று....

என்தலைவனே ஏன் தயக்கம் ...இன்னும் நீ கூடு கட்ட உண்டு இவ்வுலகில் பல இடம் ...

காதலித்தோம் கைப்பிடிக்க எண்ணி...
கடைசிவரை யார் பிடிப்பார் என
எண்ணாமலே...

எழுதியவர் : பாளை பாண்டி, (6-Mar-22, 7:21 am)
பார்வை : 316

மேலே