தான்கொடுக்குஞ் சோற்றான்வீ றெய்துங் குடி – நான்மணிக்கடிகை 70
நேரிசை வெண்பா
பதிநன்று பல்லார் உறையின்; ஒருவன்
மதிநன்று மாசறக் கற்பின்; - நுதிமருப்பின்
ஏற்றான்வீ றெய்தும் இனநிரை; தான்கொடுக்குஞ்
சோற்றான்வீ றெய்துங் குடி! 70
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
பலரும் நிறைந்து ஒத்து வாழ்வார்களானால் ஊர் நன்றாகும்;
குற்றமறும்படி கற்பனாயின் ஒருவனது அறிவு தெளிவுபெறும்;
ஆனிரைகள் கூரிய கொம்புகளையுடைய எருதுகளால் சிறப்படையும்;
தான் ஏழைகட்குக் கொடுக்கும் உணவினால் தான் பிறந்த குடி பெருமையடையும்.
கருத்து:
பலரும் நிறைந்து ஒத்து உறைவாரானால் ஊர் நன்றாம்; ஒருவன் ஐயந்திரிபறக் கற்பானானால் அவன் மதி நன்றாகும்;
ஆனிரைகள் கூர்ங்கொம்புகளையுடைய ஏறுகள் உடனிருந்தலால் சிறப்படையும்; ஏழைகட்கு உணவளிப்பதனால் ஒருவனது குடி மேலோங்கும்.
விளக்கவுரை:
பல்லாரென்றதை இங்கே முயற்சியும் ஒற்றுமையுமுடைய நன்மக்கள் பல்லாரென்று கொள்க;
அவர் அல்லாராயின் ஊர் நன்றாகாது சோம்பும். கல்வி கற்றற்குக் குற்றமாவன ஐயந் திரிபுகள்;
ஏற்றுக்கு நுதிமருப்பென்று அடைவந்தமையின் ஏற்றான் வீறெய்து மென்றவிடத்து வீறு வெற்றியெனக் கொள்க. பின்வந்த வீறு சிறப்பெனப் பொருள்படும். சோற்றோடு உடையெனவுங் கொள்ளலாம்.