பணத்தால் குணத்தை மறைத்தோம்

உலகம் தோன்றியது இயற்கையே அதன் வடிவானது
காற்று வீச தொடங்கியது அரூபமே அதன் வடிவானது
கடல் சுரந்து பெருகியது பொறுமை அதன் வடிவானது
தாவரங்கள் முளைத்தது தியாகமே அதன் குணமானது

விலங்குகள் உதித்தது, பதுங்குவது அதன் இயல்பு அல்ல
பறவைகள் பறந்தது, திட்டமிடுதல் அதன் இயல்பு அல்ல
மலைகள் எழுந்தன, கோபப்படுவது அதன் இயல்பு அல்ல
ஆறுகள் பாய்ந்தது, தன்னலம் அவற்றின் இயல்பு அல்ல

ஆறறிவு படைத்து மானிடர்கள் உலகில் பிறப்பெடுத்தனர்
உடல் அழகும் உள்ளத்தில் விகாரமும் அவர் வடிவானது
நகம் முடிகள் வெளியில் கருநாகம் உள்ளேயும் வளர்ந்தது
தலை கனமும் கறைபடிந்த மனதும் இவர்கள் குணமானது
வாய்வார்த்தை வயிறுடன் உடல் பசியும் இவர் தன்மைகள்
அப்பாவி விலங்குகளை கொன்று புசிப்பது இவர் மரபானது

இயற்கையின் அழகை ரசித்து அதை அழிக்கவும் செய்கிறான்
குடித்து குளிக்கிறான் ஆற்று நீரில், பின் அசுத்தம் செய்கிறான்
காடுகளை களைந்து மரங்களை விலங்குகளை மாய்க்கிறான்
ஆடு மாடுகளை மேய்கிறான்,பின்னர் அவற்றை உய்க்கிறான்

அறிவு திறமையால் பெரும் விஞ்ஞான வளர்ச்சிகள் கண்டான்
அழிக்கும் திறமை கொண்டு,அவன் குலத்தையே அழிக்கிறான்
படைப்பின் நுணுக்கங்களறிந்து அதனுடன் விளையாடுகிறான்
ஆயினும் அதிகம் நூறு ஆண்டுகளில் நோயினால் இறக்கிறான்

ஒழுக்கம் நேர்மை அன்பு இரக்கம் மனிதாபிமானம் ஓதுகிறான்
பணம் என்னும் பொருளை கண்டால் துரத்தி துரத்தி ஓடுகிறான்
மக்கள் சேவை அரசாங்கம் என்ற பெயரில் பணம் பதுக்குகிறான்
குறுக்கு வழி பணம் பெற, உண்மை நேர்மையை ஒதுக்குகிறான்

பணத்தை சுரண்டுபவன் மாலையிடப்பட்டு வாழ்த்தப்படுகிறான்
பெண்களை அவமதிப்பவன் கதாநாயகனாக போற்றப்படுகிறான்
கோவிலில் மோசடிகள் செய்பவன் இன்று ஆராதிக்கப்படுகிறான்
உண்மை மனிதனாக வாழ்கிறவன் வாழமுடியாமல் போகிறான்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (14-Mar-22, 5:22 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 74

மேலே