கீழாயோர் செய்த பிழைப்பினை மேலாயோர் உள்ளத்துக் கொண்டு ஊக்கல் - பழமொழி நானூறு 80

நேரிசை வெண்பா
(இடையின எதுகை)

காழார மார்ப! கசடறக் கைகாவாக்
கீழாயோர் செய்த பிழைப்பினை - மேலாயோர்
உள்ளத்துக் கொண்டுநேர்ந்(து) ஊக்கல் குறுநரிக்கு
நல்லநா ராயங் கொளல். 80

- பழமொழி நானூறு

பொருளுரை:

உரம்பெற்ற முத்துமாலையை அணிந்த மார்பை உடையவனே!

குற்றமற ஒழுக்கத்தைக் காவாத தாழ்ந்த குடியிற் பிறந்தவர்கள் இயல்பாகச் செய்த தீங்கினை உயர்ந்த குடியிற் பிறந்தவர்கள் மனத்துட் கொண்டு எதிர்த்துத் தீங்கு செய்ய முயலுதல் சிறிய நரியைக் கொல்லும் பொருட்டுக் கூரிய நாராயணம் என்னும் அம்பினை யெய்யக் கொள்வதோடு ஒக்கும்.

கருத்து:

கீழோர் தவறு செய்தால் மேலோர் அதற்கு எதிராகத் தீங்கு செய்யமுயலார்.

விளக்கம்:

குறுநரியின் பொருட்டு அம்பினைக் கொள்ளாதது போலக் கீழாயோர் பொருட்டுத் தீங்கு செய்ய மனங் கொள்ள வேண்டுவதில்லையாம். அஃது அவர் பிழையன்று. அவர் பிறந்த தாழ்ந்த குடியின் இயல்பு என்றொழிய வேண்டும்.

நாராயம் - நாராயணனது அம்பு; குறி தவறாது சென்று உயிரை வாங்குவதற்கு நாராயணனது அம்பினைக் கூறுதல் மரபு.

நாராயணன் அம்பினை உவமை கூறவே, மேலாயோர் தீங்கு செய்யின் அவர் செய்த தீமை பொறுத்தற்கு அரியது என்பது பெறப்பட்டது.

'குறு நரிக்கு நல்ல நாராயம் கொளல்' - இஃது இச் செய்யுளில் வந்த பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Mar-22, 11:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

மேலே