நினைப்பின்றித் தாமிருந்த கோடு குறைத்து விடல் - பழமொழி நானூறு 81
இன்னிசை வெண்பா
நாடி நமரென்று நன்கு புரந்தாரைக்
கேடு பிறரோடு சூழ்தல் கிளர்மணி
நீடுகல் வெற்ப! நினைப்பின்றித் தாமிருந்த
கோடு குறைத்து விடல். 81
- பழமொழி நானூறு
பொருளுரை:
விளங்குகின்ற மணிகள் பொருந்திய நீண்ட கற்பாறைகளையுடைய மலை நாடனே!
ஆராய்ந்து நம்மவர் என்று கருதி வேண்டியன உதவி நன்றாகக் காப்பாற்றியவர்களை காப்பாற்றப் பட்டவர்கள் அவர்க்குச் செய்யத்தக்க தீமையை அவர் பகைவரோடு சேர்ந்து எண்ணுதல் ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கோட்டின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலை யொக்கும்.
கருத்து:
செய்த உதவியை மறந்து தீமை செய்பவன் பற்றுக்கோடின்றி அழிவது விதி.
விளக்கம்:
கேடு, கேடு தருஞ் செயல்கள். தான் சூழ்தலேயன்றி அவர் பகைவரோடு சேர்ந்தும் சூழ்தலின், உயிர்விடுதலை ஒக்கும் என்றார்.
'உயிர் விடுதலாவது' தாம் அவர்க்குக் கேடு சூழ்தலால் காப்பாற்றி யோரால் துரக்கப்பட்டுக் களைகணின்றி, தன்னைத்தான் புறந்தரும் ஆற்றலுமின்றி அலக்கணுற்று அழிவது.
'நினைப்பு இன்றி' என்றமையான், கிளையின் மீதுற்றார் தாம் இருக்கும் நிலையறியாது உணர்வின்றி வெட்டி வீழ்தல் போல, செய்த நன்றியறிதலின்றி உணர்வழிந்து கேடுசூழ்ந்து ஒழிவர் என்பதாம்.
‘தாமிருந்த கோடு குறைத்து விடல்’ என்பது பழமொழி

