தன்னை இறைவனாச் செய்வானுஞ் சிறுவனாச் செய்வானுந் தானேதான் – அறநெறிச்சாரம் 77
நேரிசை வெண்பா
தன்னிற் பிறிதில்லை தெய்வம் நெறிநிற்பில்
ஒன்றானுந் தானெறி நில்லானேல் - தன்னை
இறைவனாச் செய்வானுந் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானுந் தான் 77
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
ஒருவன் நன்னெறியில் நிற்பானாயின் அவனை விட வேறான தெய்வம் ஒன்று இல்லை; அவன் ஒருவிதத்திலும் நன்னெறியில் நில்லானாயின், அவனிற் தாழ்ந்தது வேறொன்றில்லை;
தன்னை மற்றவர்களுக்குத் தலைவனாகச் செய்துகொள்பவனும் அவனே, தன்னை மற்றவர்கட்கும் தாழ்ந்தோனாகச் செய்து கொள்பவனும் அவ்னே ஆவான்.
குறிப்பு:
“நெறிநில்லானேல், அவனிற் றாழ்ந்தது வேறொன்றில்லை” என விரித்து முடித்தது இசையெச்சம்.

