எண்ணின் தெரிவு பொய்யாவித்து ஆகிவிடும் – நான்மணிக்கடிகை 73

இன்னிசை வெண்பா

கற்றான் தளரின் எழுந்திருக்குங்; கல்லாத
பேதையான் வீழ்வானேல் கால்முரியும்; எல்லாம்
ஒருமைத்தான் செய்த கருவி; தெரிவெண்ணின்
1பொய்யாவித் தாகி விடும்! 73

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

கல்வியறிவுடையவன் ஒன்றில் இழுக்கலுறுவானாயின் அவன் எப்படியாயினும் உய்தி பெறுவான்; படியாத அறிவிலான் இடையில் தளருவானானால் முயற்சி கெட்டு அழிவான்;

ஒரு பிறப்பில் தான் செய்தனவெல்லாம் மறுபிறப்பின் நுகர்ச்சிக்கு ஏதுக்களாம்; ஆராயுமிடத்து மெய்யுணர்வு வீடு பேற்றுக்குத் தவறாத ஏதுவாகும்.

கருத்து:

கல்வியறிவுடையவன் தளர்வானேல் எப்படியானும் உய்வான்; கல்லாத பேதை தளர்வானேல் மீள உய்வறியாது வீழ்வான்; எவர்க்கும் ஒருபிறப்பின் செய்கைகள் மறுபிறப்பின் நுகர்ச்சிக்கு ஏதுக்களாம்; மெய்யுணர்வு வீடுபேற்றுக்குத் தவறாத ஏதுவாகும்.

விளக்கவுரை:

கல்வியறிவினாற் கற்றான் மீள எழுவான்; அஃதில்லாமையாற் பேதை வீழ்வான். கால் என்றது ஈண்டு வீழாமைக்குரிய முயற்சி; வீழ்வா னென்னும் உருவக வினைக்கேற்பக் காலென்றும் முரியுமென்றும் முயற்சி கெடுதல் கூறப்பட்டது. ஆகிவிடும் என்பன துணிவுப்பொருட்டு.

(பாடம்) 1 வீயாவித் தாகி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Mar-22, 10:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே