இளங்கிளையை நாடாதே தீதுரையும் நஞ்சு - சிறுபஞ்ச மூலம் 12

நேரிசை வெண்பா

கோறலும் நஞ்;சூனைத் துய்த்தல் கொடுநஞ்சு;
வேறலு நஞ்சுமா றல்லானைத் - தேறினால்
நீடாங்குச் செய்தலும் நஞ்சாம்; இளங்கிளையை
நாடாதே தீதுரையும் நஞ்சு 12

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

உயிரைக் கொல்லுதலும், கொல்லப்பட்ட நஞ்சு போலும் உயிரின் தசையைத் தின்னுதலும் கொடிய நஞ்சு ஆகும், தனக்கு எதிர் அல்லாதவனை எதிர்த்து வெல்லுதலும் நஞ்சு ஆகும்,

ஒரு காரியத்துக்கு உரியவனென்று ஆராய்ந்து தெளியப்பட்டவனாகிய ஒருவன் (அக் காரியத்தின் மேல்) கால நீட்டிப்பு செய்தலும் நஞ்சு போலும், இளைய சுற்றத்தாரை ஆராயாமலே தீயவுரைத்தலும் நஞ்சுபோலாகும்;

கருத்துரை:

கொலை செய்தலும், நஞ்சு போன்ற புலாலுண்டலும், நிகரில்லாதவனை எதிர்த்து வெல்லுதலும், ஆராய்ந்து தெளிந்த ஒருவனை வினைமேற் செலுத்தாது காலம் நீட்டித்தலும், இளங்கிளைஞரை ஆராயாது தீங்கு செல்லுதலும் ஆகிய ஐந்தும் ஒருவனை நஞ்சு போலத் துன்பஞ் செய்யும் என்பதாம்.

நீடு - நீடித்தல், கிளை - உறவு.

இளங்கிளை என்பதில் இளமை சிறுமை; ஆதலின் வறிய சுற்றத்தார் என்க;

இளைத்த சுற்றத்தாரையே பழித்தலும் புறக்கணித்தலும் இயல்பு

தீதுரையாவது - உளம் வருத்தும் படியான பழிமொழிகளை எடுத்துரைத்தல்

மாறல்லானை வேறலு நஞ்சு என்றது தனக்கு யாதொரு துன்பமுஞ் செய்யாத, பகைமையும் வலிமையில்லாத ஒருவனைத் துன்புறுத்தல் கொடும் பாவச் செயலாய் அதைச் செய்தவனுக்கு அதற்குரிய தீங்கைத் தவறாது விளைவிக்கும் எனப்பட்டது

வினை செய்வான் ஒருவன் வகையறச் சூழ்ந்து அவ்வினை செய்யத்தக்க ஒருவனைத் தெளிந்த பின், அவனை உடனே அவ்வினை மேற் செலுத்தாது கால நீட்டித்தல் அவ்வினை முடிதற்குக் கேடாக நிகழுமாதலின் “தேறினானீடாங்கு செய்தலும் நஞ்சு“ என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Mar-22, 7:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே