கடற்கரையில்

மணலைக் கால்கள் அழுத்த,
மெதுவாய்
மனதின் அழுத்தம் புதைந்ததடி!

கனத்த காற்று வீசி, இதய
ரணத்தை அடித்துச் சென்றதடி!

கரை தாண்டி உனை
நெருங்க நெருங்க
புதுவுலகமும் புத்துணர்ச்சியும்
வந்ததடி !

அடியை உள் வாங்கி
மணற்பள்ளம் சொன்னது
"மெதுவாய் போக" !

கடலில் தூங்கி, கதிர் வீசி,
நெட்டி முறித்தெழும்
சூரியன் சொன்னது
"பொறுமை காக்க" !

முழங்கால் நனைத்து திரும்பும்
அலைகள் சொன்னது
"அணைக்க நினைக்காதே,
நான் உனதில்லை என்று" !

கடல் தொடும் வானம்,
கடுகளவு கப்பல்,
கால் நனைக்கும் அலைகள்,
கரைந்து விட்ட நுரைகள்,
கண்ணாடி மறைக்கும் உப்புக் காற்று,
கவலை மறந்த துள்ளல்
வேறென்ன வேண்டும்
கடற்கரைக் காற்றே போதும் !

கடலே,
உன் விருந்தோம்பல் தான்
வியப்பெனக்கு !
சபதம் போட்டு வந்தாலும்
சற்றேனும்
நனைத்தே அனுப்பிடுவாய் !

உனைத் திகைத்து ரசித்த
போதை கணம்
தீரவில்லை
நண்பன் தோள் தட்டும் வரை !

என்ன ஒரு முரண் !
எளியோர்க்கும் வலிமை தந்து
உன் முன் எதுவும் எளிதென
வலியோர்க்கு எளிமை காட்டி
அனுப்புகிறாய் !

பேராசைக்காரி,
கரையில் பிள்ளை கட்டிய
கோவில் வீடெல்லாம்
இழுத்துச் சென்றாயடி !

பத்தாதென,
ஆழிப் பேரலை கொண்டு
அழைத்துச் சென்றாயடி
அத்தனையும் !

அடிக்கடி வருவேன்,
அந்தமாய் அஸ்தியாய் வருவேன்
அடைக்கலம் தந்திடு !

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (2-Apr-22, 10:14 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
Tanglish : kadaRkaraiyil
பார்வை : 192

மேலே