எழுத்தாவது மண்ணாங்கட்டியாவது

நான் இங்கே, இந்த கட்டுரையை எழுதுகிறேன் என்றால், இந்நேரத்தில் என்னிடம் வாழத் தேவையான குறைந்த பட்ச உணவு, உடை மற்றும் இடம் இருக்கிறது. இந்த மூன்றுக்கும் வழி இல்லை என்றால் எவன்தான் இந்த வளைய தலத்தில் இந்த நேரத்தில் இந்த மாதிரி கட்டுரை ஒன்றை எழுதிக் கொண்டிருப்பான்?
எழுதுவதற்கு ஏழையாக இருக்க வேண்டும், பணக்காரனாக இருக்க வேண்டும் என்று தேவையில்லை. ஆனால் வயிற்று பசிக்கு உணவு இல்லாதவன், ஒரு வேளை அந்த பசியின் கொடுமையை பற்றி விமர்சிக்க வேண்டும் என்றாலும், குறைந்தபட்ச பசியை போக்கிக் கொள்ளாமல் அதை எழுதுவதும் மிகவும் கடினமான காரியம் என்பது என் எண்ணம்.
பணத்தை கட்டி ஆள்கின்ற, பணத்திலேயே புரள்கின்ற ஒருவனாலும் அமைதியுடன் அமர்ந்து கொண்டு கதையோ கட்டுரையோ எழுதுவது கூட மிகவும் அசாத்தியம் என்றே எனக்கு தோன்றுகிறது. அவன் செய்யக் கூடியது என்னவென்றால், பணம் கொடுத்து இன்னொருவரை தனக்கு பதில் எழுதச் சொல்வது.
மேற்கூறிய இரண்டு தீவிர சூழ்நிலைகளிலும் ஒருவனுக்கு எழுத வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் மட்டுமே எழுதவும் முடியும்.
மேலே குறிப்பிட்ட எழுதுவது என்ற உதாரணம் எல்லோருக்கும் எந்த ஒரு துறைக்கும் கலைக்கும் பொருந்தும்.
நன்கு கவனித்தோம் என்றால் சராசரிக்கு கொஞ்சம் மேலே உள்ள சில மனிதர்களே (இலக்கியம் படித்தவர்களும் இதில் அடக்கம்) எழுதுபவர்களாக இருக்கின்றனர்.
ஒவ்வொரு எழுத்தாளரும் பிரபலமாவதில்லை. ஏனெனில் , திறமை இருந்தும், அதிர்ஷ்டம் இல்லாமல் இருக்கும், அலையும், திரியும் எழுத்தாளர்கள் பல. நான் இதில் எந்த வகை என்ற தர்ம சங்கடமான கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள். எவருக்குமே
அவரவர் நினைப்பது போல், விரும்புவது போல் வாழ்க்கை அமைவதில்லை. அப்படி ஒருவருக்கு அமைந்தால் அவர் விதியின் சதியிலிருந்து தப்பி ஓடிவிட்ட மிகவும் அரிய சில அகதிகளில் ஒருவராக இருப்பார். நான் இதுவரை இப்படிப்பட்ட அகதிகளைக் கண்டதில்லை.

இது தான், இப்படித்தான் என்று எதுவுமே இல்லை இந்த உலகத்தில். நன்மை செய்ய நினைப்பவர் நன்மை செய்கிறார், தீங்கு புரிபவர்கள், புரிந்து கொண்டும், புரிந்து கொண்டே இருக்கிறார்கள். தனக்கு தோன்றியதைச் செய்யும் பேர்வழிகளும் இருக்கிறார்கள். சிலர் படிக்கிறார்கள், வேலை கிடைக்கும் என்பதால். சிலர் வேலை செய்கின்றனர், படிக்க வேண்டும் என்ற ஆவலால்.
படிப்புக்கு ஏற்ற ஊதியம், உழைப்புக்கு ஏற்ற வருவாய் என்று எந்த ஒரு நியதியும் இவ்வுலகில் இல்லை.
இன்று நிலவும் பண நிலையில், குண நிலையில், மன நிலையில், இது போல பல நிலைகளில் , கிடைத்த வரை லாபம் என்று தான் வாழவேண்டி இருக்கிறது. எல்லாமே மாறக்கூடிய விஷயங்களாகி விட்ட இவ்வுலகில் பல நல்லவர்கள் நல்ல மனமுள்ளவர்கள் மனிதாபிமானம் கொண்டவர்கள் பிழைப்புக்கே வழி இல்லாமல், அந்த கொடுமையால் தீயவர்களாகவும் மாறி விடுகிறார்கள் என்பது உண்மையையே சந்தேகிக்க வைக்கும் விபரீதமான போக்கு.

என்ன உலகம், என்ன வாழ்க்கை, என்ன ஒரு அநீதியான நீதியை மிதித்து தள்ளும் மனித நியதி!
அக்கிரமம் அநியாயம் அதர்மம் செய்பவர்க்கே இந்த உலகம் என்று இந்த உலகம் ஆனாலும் ஆச்சரிப் படுவதற்கில்லை.

கையில் தம்பிடி பைசா இல்லாமல் ததிக்கிணதாம் போட்டாலும், கோடி கோடி பணம் சம்பாதிக்கும் நடிகர்களையும் பிரபலங்களையும் தெய்வமாகவே மதித்து அவர்களுக்கு ஜால்ரா போடும் பரிதாபமான மக்கள் வாழும் பூமி, அழகிய இயற்கை காட்சிகள் நிறைந்த இந்த பூமி. எவன் எப்படி வேண்டுமானாலும் எக்கேடு கெட்டு போகட்டும், நமக்கு தேவை பணம் மற்றும் ஆடம்பரம் மட்டுமே என்று நினைப்பவர்கள் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள். இந்த நிலையில் "எங்கே உலகத்தில் ஒரு நல்லவன் கூட வாழ முடியாதா " என்ற அபாய நிலை வந்து விடுமோ என்ற அச்சம், இருக்கும் சில நல்லவர்கள் மனதில் நிச்சயமாக ஊசலாடிக் கொண்டு தான் இருக்கும்.
உங்களுக்கு அப்படி ஊசலாடுகிறதா, இல்லையா?

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (6-Apr-22, 5:52 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 45

சிறந்த கட்டுரைகள்

மேலே