கோய்வாயிற் கீழுயிர்க்கீ துற்றுக் குரைத்தெழுந்த நாய்வாயுள் நல்ல தசை - சிறுபஞ்ச மூலம் 16

நேரிசை வெண்பா

கதநன்று சான்றாண்மை தீது கழிய
மதநன்று மாண்பில்லார் முன்னர் - விதநன்றாற்
கோய்வாயிற் கீழுயிர்க்கீ துற்றுக் குரைத்தெழுந்த
நாய்வாயுள் நல்ல தசை 16

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

நற்குணம் இல்லாதார் முன்பு கோபம் நல்லது, சால்புடைமை தீதாகும், மிக்க வலி செய்தல் நல்லது, கோய்போலும் வாயை யுடைய கீழ்மக்களுக்கு கொடுக்கும் உணவு குரைத்துக் கொண்டே எழுந்த நாயின் வாயிற் கொடுத்த நல்ல மாமிச விதத்தினும் நன்மையாம்.

பொழிப்புரை:

நன்மைக் குணமில்லாதார் முன்பு கோபம் நன்று, சான்றாண்மை தீது, மிக்கவலி செய்தல் நன்று; கள்ளினை முகக்குங் கோய்போலும் வாயையுடைய கீழ்மக்கட்கு ஈயும் உணவும், குரைத்தெழுந்த நாய் வாய்க் கீயும் தசையின் றிறப்பாட்டினன்று.

கருத்துரை:

நற்குணமில்லாதவர் கெதிரில் கோபமே நன்று, சான்றாண்மை தீது, மிக்க வலி செய்தல் நன்று; கீழ்மக்கட்கு ஈயுமுணவு குரைத்துவரும் நாய்வாயிற் கொடுத்த தசைக்கு நிகராகும்.

சான்றாண்மை - சால்புடைமை, சால்பாவது அன்பு, நாண், ஒப்பரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகிய ஐந்தும் நிறைந்திருப்பது.

மாண்பு - நற்குணம்,

கோய் - கள் முகக்கும் கலம், இது கீழ்மக்கள் வாய்க்கு ஒப்பு; கீழ் மக்கள் வாய் மிகுந்த உணவை உருட்டிப் போடுவதற்கு ஏற்றபடி அகன்றதாயும் வேற்று வடிவம் பெற்றதாயும் கெட்டமொழிகள் வெளிப்படத் தக்கதாயும் அருவருக்கத் தக்கதாயுமிருக்கும். வாயுள் - உள்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Apr-22, 3:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே