யாரானும் சொற்சோரா தாரோ இலர் – பழமொழி நானூறு 94

இன்னிசை வெண்பா

நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர்
இற்பாலர் அல்லார் இயல்பின்மை நோவதென்?
கற்பால் இலங்கருவி நாட!மற்றி யாரானும்
சொற்சோரா தாரோ இலர். 94

– பழமொழி நானூறு

பொருளுரை:

மலைகளிடத்து விளங்கிய அருவிகள் பாயும் மலை நாடனே!

நல்ல குடியின்கட் பிறந்து நல்லனவற்றைக் கற்றாரும், சில நேரங்களில் ஆராய்தலிலராய்ப் பிழைபடச் சொல்வார்கள்; நல்ல குடியின்கட் பிறவாதார் சொற்களிலுள்ள இன்னாமையும் பிழைகளுமாகிய இயல்பின்மையை நினைந்து வருந்துவது ஏன்?

யாவரே யாயினும் சொல்லில் சோர்வுபடாதார் இல்லை.

கருத்து:

யாவர் மாட்டும் சொற்சோர்வு உண்மையான், கருத்து ஒன்றனையே நோக்குக.

விளக்கம்:

நல்லன கூறுதற்கும் அல்லன கூறுதற்கும் குடிப்பிறப்பு காரணமாயிற்று.

நல்ல குடிப்பிறந்தார் சொற்சோர்வு படார்; சில நேரங்களில் அவரும் உலக வாசனையால் சோர்வுபடுதலின் யாராயிருந்தாலும் கருத்தொன்றனையே நோக்குக என்பதாயிற்று.

'யாரானும் சொற் சோராதாரோ இலர்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Apr-22, 6:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே