துன்பம் இலேம்பண் டியாமே வனப்புடையேம் என்பார் இருகால் எருது - சிறுபஞ்ச மூலம் 19

நேரிசை வெண்பா

தேவரே கற்றவர் கல்லாதார் தேருங்காற்
பூதரே முன்பொருள் செய்யாதார் - ஆதரே
துன்பம் இலேம்பண் டியாமே வனப்புடையேம்
என்பார் இருகால் எருது 19

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

அறிவு நூல்களைப் படித்தவர் தேவரை ஒப்பவரேயாவர்; அவற்றைக் கல்லாதவரைப் பற்றி ஆராய்ந்து பார்க்குமிடத்து பிசாசுகளோடு ஒப்பவரேயாவர்; முதுமைப் பருவம் வருதற்கு முன்பே பொருள் தேடி வைத்துக் கொள்ளாதவர் அறிவிலாரேயாவர்; முன்னே நாம் செல்வமுடையோ மாயிருந்ததனால் துன்பம் உடையோமல்லோம், அழகுடையேம் என்று சொல்லுவோர் இருகால் மாடுகளுக்கு நிகராவர்.

பொழிப்புரை:

நூலைக் கற்றார் தேவரோடு ஒப்பர், கல்லாதார் ஆராயுங்காற் பூத பசாசுகளோடு ஒப்பர், தமக்கு மூப்பு வருவதற்கு முன்பே பொருளைத் தேடித் தமக்கு வைப்பாக வைக்காதவர் ஒன்று மறியாது ஒரு பற்றின்றித் திரியும் மாந்தரோடு ப்பர், பண்டு செல்வமுடையேமாதலால் ஒரு துனபமும் இலோம் என்பாரும், பண்டு யாமே அழகியோம் என்பாரும் இருகாலுடைய எருதுகளோடு ஒப்பர்.

கருத்துரை:

படித்தவர் தேவர், படியாதவர் பூதபசாசுகள், முதுமைக்கு இளமையிலேயே பொருள் தேடாதவர் அறிவிலார், முன்பு பொருளுடைமையால் துன்பமற்றோம், முன்பு அழகுடையவரா யிருந்தோம் என்பவர் இரண்டுகால் மாடுகள்.

தேர்தல் - ஆராய்தல். நாற்கால் எருத்திற் பிரித்தற்கு இருகால் எருது என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Apr-22, 8:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

சிறந்த கட்டுரைகள்

மேலே