கூறுங்கால் இல்லையே ஒன்றுக் குதவாத ஒன்று - பழமொழி நானூறு 111

நேரிசை வெண்பா

நன்றே ஒருவர்த் துணையுடைமை பாப்பிடுக்கண்
நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் - விண்டோயும்
குன்றகல் நன்னாட! கூறுங்கால் இல்லையே
ஒன்றுக் குதவாத ஒன்று. 111

- பழமொழி நானூறு

பொருளுரை:

ஆகாயத்திற் பொருந்தும் குன்றுகள் அகன்ற நல்ல நாடனே! ஒவ்வொருவரும் ஒருவரைத் துணையாகக் கொள்வது நல்லதாகும்.

சொல்லப் போனால் பாம்பால் வரக்கூடிய துன்பத்தை பார்ப்பானிடத்துத் துணையாக வந்திருந்தது சிறிய நண்டேயாயினும், அந்த நண்டே அதனை நீக்குதலால் ஒன்றிற்கும் உதவாத ஒரு சிறு பொருளும் இல்லை.

கருத்து:

துணை பெற்று வழிச்செல்லுதல் நல்லது.

விளக்கம்:

நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் என்றது ஆசிரியர் கூறிய வேலையை முடிக்கும் பொருட்டு வேற்றூருக்குச் செல்லுமொருவன் தன் தாய் கட்டளைப்படி துணையாக ஒரு நண்டினையும் கொண்டுசென்றான், அயர்ந்து ஒரு மரத்தடியில் அவன் தூங்கும்பொழுது அவனைக் கொல்லும் பொருட்டு வந்த நாகத்தை நணடு கொடுக்கால் இறுகப் பிடித்துக் கொன்றதாம்.

'ஒன்றுக் குதவாத ஒன்று இல்லை' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-May-22, 10:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே