ஊனுடம்பு எஞ்ஞான்றுந் தான்மறுத்துக் கொள்ளான் தளர்ந்து - சிறுபஞ்ச மூலம் 20
நேரிசை வெண்பா
கள்ளான்சூ(து) என்றுங் கழுமான்; கரியாரை
நள்ளான்; உயிரிரங்க நாவாடான் - நள்ளானாய்
ஊன்மறுத்துக் கொள்ளானேல் ஊனுடம்(பு) எஞ்ஞான்றுந்
தான்மறுத்துக் கொள்ளான் தளர்ந்து 20
- சிறுபஞ்ச மூலம்
பொருளுரை:
பிறர்பொருளைக் களவு செய்யாதவனாய், சூதாட்டத்தில் எக்காலத்தும் கலந்து கொள்ளாதவனாகவும்,
தம் தகுதிக்குத் கீழான கல்லாதவருடன் நட்புக் கொள்ளாதவனாகவும், பிறவுயிர்களாகிய மக்கள் வருந்தும்படி கடுஞ்சொல் சொல்லாதவனாகவும்,
ஊனுணவைப் விரும்பாது அவ்வூனுணவை மீண்டும் கொள்ளாதவனாக இருப்பானாயின்,
அவன் மீண்டும் தசையோடு கூடிய உடம்பை ஒழுக்கம் தளர்ந்து மறு பிறவியை எந்நாளும் எடுக்க மாட்டான்.
பொழிப்புரை:
பிறர் பொருளைக் களவு காணாது, சூதினைப் பற்றி காதலியாது, கீழ்மக்களுடன் நட்புக் கொள்ளாது, பிறர் மனந் துன்புறும்படி வன்சொற் சொல்லாது கடைப்பிடியுடையனாய் ஊனுணவை மறுத்து விரும்பானாயின் எஞ்ஞான்றும் ஒழுக்கத்திற் தளர்ந்து மாறிப் பிறந்து ஊனுடம்பினைக் கொள்ளான்.
கருத்துரை:
கள்ளாமலும் சூதாடாமலும் கயவருடன் நட்புக் கொள்ளாமலும் பிறர் வருந்த வன்சொற் கூறாமலும் ஊனுண்ணாமலும் ஒருவன் இருப்பானாயின் அவன் மீண்டும் பிறக்கமாட்டான் என்பதாம்.
பிறர்மனந் திடுக்கிட்டுப் பேசுதல் கொலையை நிகர்த்த பழிச் செயலேயாகும்.
கள்ளல் முதலிய தீய செயல்களை விட்டொழிப்பவன் இம்மையில் சீர்த்தியுடனிருந்து பின் பிறப்பு நீங்கி வீடடைவன்.
கள்ளான், கழுமான், நள்ளான். நாவாடான் என்பன முற்றெச்சங்கள்.
கழுமல் - பற்றல், கலத்தல்;
கரியார் - கருமையை யுடையவர். கருமை - மனவிருள், நா ஆடல் - நா அசைதல், பேசுதல்;
‘ஊன் நள்ளானாய் மறுத்துக் கொள்ளானேல்‘ என்பதற்கு ஊனை விரும்பாதவனாய் அதனையுண்ணும் பிறரையும் தடுத்துத் தானும் உட்கொள்ளானேல் எனப் பொருள் கூறுதலுமுண்டு.
உயிர் என்றது ஈண்டு மக்களுயிரை.