பூண்ட பறையறையார் போயினார் இல் - பழமொழி நானூறு 112

இன்னிசை வெண்பா

ஆண்டீண் டெனவொன்றோ வேண்டா அடைந்தாரை
மாண்டிலார் என்றே மறைப்பக் கிடந்ததோ?
பூண்டாங்(கு) இளமுலைப் பொற்றொடி! பூண்ட
பறையறையார் போயினார் இல். 112

- பழமொழி நானூறு

பொருளுரை:

ஆபரணத்தைத் தாங்குகின்ற இளமையான தனங்களையும், பொன்னாலாகிய தொடியையும் உடையாய்!

தம்மிடத்துள்ள பறையை அடிக்காது சென்றார் ஒருவரும் இலர்; ஆகையால், அங்கே குற்றம் செய்தார்; இங்கே குற்றம் செய்தார் எனக் கூறுதல் ஒரு காரணமாகுமோ? தம்மிடத்து நட்பாக அடைந்தவர்களை அங்ஙனங் கூறுதல் வேண்டா;

மாட்சிமை உடையாரல்லர் என்று நட்பை விடுத்தற்குக் கிடந்ததொரு நீதி உண்டோ? பொறுத்து நட்பாகவே கொண்டு வேண்டுவன செய்க.

கருத்து:

நட்டார் செய்த குற்றங் கருதி அவரை நீக்குதல் கூடாது.

விளக்கம்:

பறை பூண்டோர் தங்கடமை யென அறிந்து அறைந்து சேறல்போல, தம்மை அடைந்தாரைக் காப்பாற்றுதல் தங்கடனென அறிந்து காப்பாற்றுதல் வேண்டும்.

'பூண்டபறை யறையார் போயினார் இல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-May-22, 7:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே