உங்களுக்காக ஒரு கடிதம் 19

அன்புத் தோழர்களே...
நலம். நலம்தானே..அடுத்து..நான் எழுதப்போவது ஒரு அரக்கனை பற்றியது.உங்களுக்கே தெரிந்திருக்கும். மது அரக்கனைத்தான் சொல்கிறேன்.அவன் உள்ளே சென்றுவிட்டால்...மனிதன் மிருகமாகி விடுகிறான். நான் சொல்லித் தெரிவதில்லை. சொல்வதற்கு என்ன இருக்கிறது? நமக்குத் தெரிந்ததுதான்...நாம் அன்றாடம் பார்ப்பதுதான்...தினம்தினம் அனுபவிப்பதுதான். அரக்கன் நம்மை பிடித்து ஆட்டும்போது நாம் நம் நிலை மறக்கிறோம்.கட்டுப்பாட்டை இழக்கிறோம். அதன் முடிவு......?.பைக்கோ...இல்லை காரோ...இல்லை கனரக வாகனமோ வேகமாய் ஒட்டி,கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பு சுவரிலோ ...இல்லை எதிரே வரும் வாகனங்கள் மீதோ...இல்லை நடந்துபோகும் அப்பாவி ஆட்கள் மீதோ மோதி... 'ஸ்பாட் டெட்' என்றால் அது உன்னோடு போகும். இல்லை இல்லை அது எப்படி உன்னோடு போக முடியும்? உன்னை நம்பி இருக்கும் உன் ரத்தத்தின் ரத்தமான பூங்குழந்தையை எண்ணிப் பாருங்கள்.உன் வருகைக்காக வாசற்படியில் காத்திருக்கும் இளம் மனைவியை நினைத்து பாருங்கள். நீ வாங்கிவரும் எதோ ஒன்றுக்காக மட்டும் இல்லாமல் உன்னை ஒவ்வொருநாளும் உயிரோடு பார்ப்பதற்கு ஏங்கித் தவித்திருக்கும்...தவமிருக்கும் வயதான பெற்றோர்களை கண்முன் நிறுத்திப் பாருங்கள். இளைஞர்களை விட்டு விடுவோம். அவர்கள் வயது...வேகம்.. அவர்கள் கல்லறைக்குள் அவர்களே குழி நோண்டி அவர்களே கிடத்திக்கொள்கிறார்கள். அவர்கள் கதைக்கு அப்புறம் வருவோம்.வயதில் முதிர்ந்தவர்களாகிய நம் கதையை பாப்போம்.
சரி..முன்பே சொன்னதுபோல் 'ஸ்பாட் டெட்' என்றால் உன் ஒரு உயிரோடு போகும். உன் உயிரை போக்கிக்கொள்ளவே உனக்கு உரிமை இல்லை.மற்றவர் உயிரை எடுப்பதற்கு உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நீ எமனின் ஏஜண்டா என்ன? இல்லை இத்தனை உயிரை எடுத்தால் அவார்டு ஏதாவது கொடுக்கப் போகிறார்களா? ஏன் இந்த அவசரம்? உங்களை குறை சொல்வதா? ஹை ஸ்பீட் என்ஜின் வைத்து வரும் நவீன வாகனங்களை குறை சொல்வதா? இல்லை குண்டும் குழியுமான சாலைகளை குறை சொல்வதா? எது எப்படி இருந்தாலும் குடியைத்தான் நான் குற்றம் சொல்வேன். அது ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்களினால் ஏற்படும் "உயிர் கொலைகள்" என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஒரேயடியாய் உயிர் போய்விட்டால் ஒரு மாதமோ...ஒரு வருஷமோ துக்கம் அனுசரித்துவிட்டு மறந்து போய்விடுவோம்.
அதே...உயிர் போகாமல் கை...காலையோ இழந்து முடமாகி வீட்டில் முடங்கி விட்டால்... எஞ்சிய வாழ்க்கையை எப்படி தள்ளுவது? கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். உனக்கு மரியாதைதான் இருக்குமா? இல்லை மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு 'கோமா' நிலைக்குத் தள்ளப்பட்டால் நிலைமையை யோசித்துப்பாருங்கள். எப்போ பிழைப்போம்? எப்போ சாவோம்? உனக்கும் தெரியாது.. எனக்கும் தெரியாது...ஏன் அந்த டாக்டருக்கும் தெரியாது...உன்னை படைத்த கடவுளுக்கும் தெரியாது. வாழ்கிறோமா? இல்லை செத்துவிட்டோமா? யாராலும் கணிக்கவும் முடியாது. இது ஒரு புறம் இருக்க நீ என்ன கோடீஸ்வரனா? நிறைய சொத்து சேர்த்து வைத்திருக்கிறாயா? நீ பிழைத்து வருவதற்குள் உன் சேமிப்பு எல்லாம் கரைந்து கட்டெறும்பாகி விடும். தேறி வந்தால் சரி...பெர்மனெண்ட் சேதாரத்தோடு இருந்துவிட்டால்...வாழ்நாள் முழுவதற்கும் ஆகப்போகின்ற செலவுகளை கணக்கிடுங்கள்.ம் இது எல்லாம் உன் ஒருவனுக்காக. குடும்பத்தில் உயிரோடு இருக்கும் மற்றவர்களின் வாழ்க்கை... எதிர்காலம்...பிள்ளைகளின் படிப்பு,கல்யாணம்,சீமந்தம்,,இத்யாதி...இத்யாதிகள். நினைத்துப் பாருங்கள். அவை யாவும் நம் பொறுப்பா?..இல்லையா? மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் எண்ணிப் பாருங்கள். உன் ஒரு குடியால் ஒரு குடும்பமே நாசமாய் போவதா? சொல்லுங்கள்.
அது ஒருபுறம் இருக்க. நீ இடித்து ..சுக்கு நூறாகியிருக்கும் வாகனத்தை சரிபண்ண ஆகின்ற செலவு... புதிதாய் மறுபடியும் வாகனம் வாங்க முடியுமா? அப்படியே வாங்கினாலும் மறுபடியும் அதே கதை தொடருமானால்... செலவு...செலவு...செலவு மட்டும்தான். சரி ஒருவனைப் பற்றி மாத்திரம் பேசிக் கொண்டிருக்கிறோம். நீ அடித்து குற்றுயிரும் கொலையுயிருமாய் பாதிக்கப் பட்ட அந்த அப்பாவி மனிதர்களை...அல்லது குடும்பத்தின் ஆணி வேரான ஒருத்தன் கொலையுண்டுபோனால் அந்த குடும்பம் எப்படி அதை தாங்கும்? அவர்கள் அதை எப்படி சமாளிப்பார்கள்? அந்த குடும்பத்தின் சாபமும் உன் தலைமேல் விடியும் அல்லவா...? கொஞ்சம் மனசாட்சியோடு எண்ணிப்பாருங்கள். உன்னால் பாதிக்கப்பட்டது நாயோ...பூனையோ..மற்ற மிருகங்களோ இல்லை சக மனிதன். உனக்கென்ன அவனை முன்ன பின்னத் தெரியுமா? முன் விரோதமா? அப்படியிருக்க இதை எந்த கணக்கில் எழுதுவது?
சின்ன கணக்கொன்றை சொல்கிறேன். 2018 - 2019, NCRB (நேஷனல் கிரைம் ரெகார்டஸ் பீரோ ) நடத்திய ஆய்வின்படி இந்தியாவிலேயே அதிக RTA ...ரோட் ட்ராபிக் ஆக்சிடென்ட் டெத் ரேட் பாண்டிச்சேரிதான் முன்னணியில் இருக்கிறது என்கின்ற உண்மை ஆணி அடித்ததுபோல் முகத்தில் அறைகின்றது. 72 .8 %. சராசரியாக 1100 லிருந்து 1200 வரை ஏற்படுகிறது. சொல்வதை சொல்லிவிட்டேன்.எழுதுவதை எழுதிவிட்டேன். யோசியுங்கள். கோபப் படுவதாலேயோ..இல்லை டென்ஷன் ஆவதாலோ ஒன்னும் ஆகிவிடப் போவதில்லை. உண்மையை ஒத்துக்கொள்வோம் அதை சரி செய்ய பாடுபடுவோம். சரிதானே....
தொடரும்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (19-May-22, 8:53 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 41

மேலே