உண்மைகள்— 3

அநுபவம் சிறந்த முடிவைத் தரும்
ஆனால் அநுபவமோ பல தவறான
முடிவுகளுக்கு பின் தோன்றுவது

விளையும் காலம்
உதவாது போனால்
விதைகள் என்ன செய்யும் ?

பற்று வைத்து பழகினால்
மற்றவர் என்றாலும்
பெற்றவர் போல போற்றப்படுவர்

தனம் தேடி வைத்து
தினந்தோறும் பூசித்தாலும்
தவறுகள் தலை காக்காது

இதயத்தின் சுமையை
இறக்கி வைத்து விட்டால்
இன்பம் தான் எப்போதும்

நாக்கு நன்றி கெட்டது
தேக்கு போல உறுதி யிருந்தும்
தேம்பி அழ வைத்துவிடும்

வருணனைக் காண தவமிருந்த
விளை நிலம்—அவன்
வீட்டுக்குள் நுழைந்ததால் அழுகிறது

அறிவு தருவதை விட
அநுபவம் தரும் புத்தி
அளந்து வாழச் சொல்லும்

உத்திரத்தில் தொங்கும் கயிறு
உறவாடத் துடிக்குது
உதிரத்தை ஓடாமல் நிறுத்த

சேர்ந்து வாழும் மாந்தரை விட
பழகிய வன விலங்குகள்
கேடு நினைக்காது

எழுதியவர் : கோ. கணபதி. (22-May-22, 10:23 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 72

மேலே