கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு - பழமொழி நானூறு 114
நேரிசை வெண்பா
தெற்ற ஒருவரைத் தீதுரை கண்டக்கால்
இற்றே அவரைத் தெளியற்க - மற்றவர்
யாவரே யாயினும் நன்கொழுகார் கைக்குமே
தேவரே தின்னினும் வேம்பு. 114
- பழமொழி நானூறு
பொருளுரை:
தெளிவாக நண்பு பூண்ட ஒருவரை ஒருவர் பொல்லாங்கு உரைக்கும் உரையைக் கேட்டால் நம்மையும் இப்பெற்றியே உரைப்பார் என்று கருதி அவரை நம்பாதொழிக;
உண்பவர்கள் தேவர்களே ஆனாலும் வேம்பு கசக்குந் தன்மையது. அதுபோல, நட்புப் பூண்பவர்கள் மிகவும் சிறந்தவர்களாயினும் அவர்களோடு நன்றாக ஒழுகுதல் இலர்.
கருத்து:
தீயவரை நட்பாகக் கொண்டு ஒழுகுதல் கூடாது.
விளக்கம்:
'யாவரே யாயினும் நன்கு ஒழுகார்' என்றதால் நட்புப் பூணுதற்குத் தகுதியற்றவர் என்று விலக்கி வைத்தல் வேண்டும்.
'கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு' என்பது பழமொழி.