ஒற்றைச் சிறகுள்ளப் பறவை

ஒற்றைச் சிறகுள்ள பறவை
******************************
கதவுகள் தன்னைத் தானே
பூட்டிக் கொள்வதில்லை
அங்குமிங்கும் நகராதபடி
மனிதன் அதன்
கால்களைக் கட்டிப் போடுகிறான்
*
கதவுகள் ஒற்றைச் சிறகுள்ள பறவைகள்
அதனால்தான் அவற்றால் பறக்க முடிவதில்லை
*
கதவுகளைக் கொண்டு
சிறையும் விடுதலையும் பெற்றுக்கொள்கிற மனிதன்
கதவுகளுக்கென்று எதையும் பெற்றுக் கொடுப்பதில்லை
*
கதவுகள் பலம் குன்றும் வேளை
மனிதன் சந்தேகப் பேர்வழியாகிறான்.
*
குற்றம் புரிந்து சிறைக்குள்
போய்வரும் மனிதர்கள்
குற்றமற்றக் கதவுகளைச்
சிறைக்குள் அடைத்து வைத்திருக்கிறார்கள்.
*
ஒரே நிலையில்
அங்குமிங்கும் ஓடியாடிக் களைத்தக் கதவுகள் சில நேரங்களில்
" கிரீச்" "கிரீச்" என்றே அழுகின்றன.
அது கதவுகளின் விடுதலைக்கான தேசிய பாடலாகவும் இருக்கலாம்
*
வாழ்தலின் கதவுகள் மூடப்படும்
ஒருநாளில் நமக்காக
மரணத்தின் கதவு
சொர்க்கம் அல்லது நரகம் சவப்பெட்டியின் கதவு என்ற
மூன்று கதவுகள்
திறந்து கொள்கின்றன
*
அதற்குள்
ஆயிரமாயிரம் தில்லுமுல்லுகளின் கதவுகளைத் திறந்துவிட்டு
அல்லல்படும் நாம் அஹிம்சையின் பலத்துடன் கூடிய
அன்பின் கதவுகளைத் திறந்துவைத்து மகிழ்ச்சியின் நறுமணத்தை அனுமதிப்போம்.
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (24-May-22, 2:21 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 132

மேலே