பேராசை

ராஜேஷ் தனது இருசக்கர வாகனத்தை வேகமாக வந்து நிறுத்தி விட்டு தனது லேப்டாப் மற்றும் மதிய உணவு பையையும் எடுத்துக் கொண்டான் . கலைந்த தனது தலைமுடியை சரி செய்து கொண்டான். அவனிடம் ஒரு அவசரம் தெரிந்தது . படபடப்புடன் காணப்பட்டான் . அப்போது அவனது அலுவலக காவலாளி ஓடிவந்து விரைப்புடன் குட் மார்னிங் சார் என்றான் . ராஜேஷ் பதிலுக்கு கையசைத்து மாடிப்படிகளில் ஏறினான் . அலுவலகத்தில் நுழைந்து தனது இருக்கையில் அமர்ந்து கம்ப்யூட்டரை இயக்கி வேலையைத் துவங்கினான் . அப்போது, என்னடா ராஜேஷ் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டாய் என்று கேட்டான் திவாகர் . ஆச்சரியமாக உள்ளது என்று கேலியாக சிரித்தான். நேற்று மாலை எனக்கு ஒரே தலைவலியாக இருந்தது. சீக்கிரம் சென்றுவிட்டேன் . மேலும் நேற்றைய வேலையை முடிக்காமலே சென்றதால் இன்று சீக்கிரம் வர வேண்டியதாகி விட்டது , வேறு ஒன்றுமில்லை என்றான் . அதனால் தான் சீக்கிரம் வந்து மேனேஜர் வருவதற்குள் முடிக்க வந்தேன் . ஆமாம் , நீ எனக்கு முன்னரே இருக்கிறாய் , ஏன் ? அதற்கு திவாகர் , அது ஒன்றுமில்லை எனது வீட்டில் யாரும் இல்லை , ஊருக்கு சென்றுவிட்டனர் . ஆகவே சீக்கிரம் வந்து விட்டேன் என்றான் . இருந்தாலும் அவன் பதிலை முழுமையாக கேட்காமல் தனது வேலையில் மூழ்கினான் ராஜேஷ் . ஆனால் தனது ஓரக்கண்ணால் அடிக்கடி திவாகரை கவனிக்கத் தவறவில்லை . ஒரு குழப்பம் அவனுக்குள் ஏற்பட்டது .

சற்று நேரத்தில் அலுவலகம் பரபரப்பானது. ஏறக்குறைய அனைத்து ஊழியர்கள் வந்து விட்டனர். அங்கு 150 பேர் பணிபுரிகிறார்கள் மேலாளர் மற்றும் உதவி மேலாளர் உட்பட..அது ஒரு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம். ராஜேஷ் அதில் எட்டு வருடங்களாக பணி புரிகிறான். ஆனால் அவனுள் ஒரு வருத்தம் இருக்கவே செய்தது. தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று. வேலை செய்வதற்கு ஏற்ப பதிவு உயர்வு , ஊதியம் பெற முடியவில்லை என்ற ஆதங்கம் உண்டு. இது போன்ற நிலை பல அலுவலகங்களில் உண்டு . நேர்மையான சிலருக்கு பதிவு உயர்வு, ஊதியம் கிடைக்காது . மாறாக எதிர்மறையாக நடப்பது வாடிக்கையாகி விட்டது .

மேனேஜர் சிறிது தாமதாக வந்தாலும் உடனே ராஜேஷை தான் அழைத்தார் . நல்லவேளை முடித்துவிட்டேன் என்று மனதிற்குள் கூறிக் கொண்டே விரைந்தான் ராஜேஷ் அவரது அறையை நோக்கி. குட்மார்னிங் சார் என்று கூறிவிட்டு தானாகவே அவரிடம் ,நேற்றைய வேலையை முடித்துவிட்டேன் சார். முழு விவரங்கள் மற்றும் எனது குறிப்புகளையும் இதனுடன் இணைத்துள்ளேன் என்று கூறிவிட்டு அவரிடம் வழங்கினான் ராஜேஷ். அதை வாங்கிக்கொண்ட அவரும் , ராஜேஷ் எனக்குத் தெரியும் நீங்கள் விரைந்து முடிப்பேர்கள் என்று . அதனால்தான் அந்த வேலையை உங்களிடம் அளித்தேன் என்றார் மேனேஜர் . அவரும் அதை படித்துக் கொண்டே , உட்காருங்கள் ராஜேஷ் , உங்களிடம் பேச வேண்டும் என்றார். அவன் சற்று குழப்பத்துடன் ஒன்றும் புரியாமல் அமர்ந்தான் .

மானேஜர் சற்று மெல்லியக் குரலில் பேச ஆரம்பித்தார் . ராஜேஷ், இரண்டு நாட்களுக்கு முன்னர் நமது எம் டி ( M D ) ஒரு செய்தியை என்னிடம் தெரிவித்தார். நமக்கு வர வேண்டிய மூன்று ஆர்டர்கள் வேறு கம்பெனிக்கு சென்று விட்டது என்றும் , நாம் குறிப்பிட்ட தொகையை விட மிக சற்றே குறைவான ரூபாய் அவர்கள் குறிப்பிட்டிருந்ததால் நமக்கு கிடைக்காமல் போனது என்று வருத்தமாக கூறியிருந்தார் . அதுமட்டுமன்றி அவருக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. நாம் குறிப்பிட்டதே மிக குறைவு . பின்பு எப்படி அவர்களுக்கு சென்றிருக்கும் என்று தோன்றியிருக்கிறது . ஆகவே இதை கண்டுபிடிக்க வேண்டும் என்று என்னிடம் கூறியதும் எனக்கும் அந்த சந்தேகம் எழுந்தது . ஆகவே அந்த அடிப்படையில் தான் இந்த வேலையை உங்களிடம் கூறியிருந்தேன் . நீங்களும் உங்கள் பணியைச் செவ்வனே முடித்து எனக்கு அளித்திருக்கும் இந்த அனைத்து குறிப்புகளும் அதை உறுதிப்படுத்தி விட்டது. சபாஷ் ராஜேஷ் . உடனடியாக அவன் குறுக்கிட்டு, சார் எனக்கு திவாகர் மேல் ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. கடந்த ஒரு மாதமாக அவன் தினமும் ஆபிசுக்கு வெகு சீக்க்கிரம் வருவதாக கேள்விப்பட்டேன் . இன்று அதை உறுதிப்படுத்தவே நான் இன்று சிறிது சீக்கிரம் வந்தேன் . அவன் எனக்கு முன்னதாகவே இங்கு இருந்தான் . நான் இந்த பணியை செய்துகொண்டிருக்கும் போது என்னை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தான் . கொஞ்சம் அதிர்ச்சியுடன் காணப்பட்டான் சார் என்றான் . . திவாகர் தினமும் மிகவும் சீக்கிரம் வந்து ஏதோ பைல்களை எடுத்து அதை நகல் எடுப்பதாக ஒரு தகவல் சார் . இந்த ரகசியம் நமக்குள் இருக்கட்டும் ராஜேஷ் என்று அவனை அனுப்பிவிட்டு , அவசரமாக செல் போனை எடுத்து யாரிடமோ பேசினார். அன்று மாலை அனைவரும் சென்ற பிறகு ராஜேஷ் மானேஜர் அறைக்கு சென்று அவரிடம் , சார் நான் வாட்ச்மன் முருகனிடம் விசாரித்தேன் . அவன் என்னிடம் , அடிக்கடி ஒருவர் காலையில் சீக்கிரமே வந்து திவாகருக்காக காத்திருப்பதாகவும் , பின்பு அவரிடம் திவாகர் ஏதோ ஒரு கவரை கொடுப்பதாகவும் அவனும் பதிலுக்கு ஒரு கவரை அவனிடம் தருவதாகவும் கூறினான் . அனைத்தையும் கேட்டுக்கொண்ட மேனேஜர் சரி நீங்கள் போகலாம் ராஜேஷ் என்றதும் , அவன் உடனடியாக சார், எனக்கு இரண்டு நாட்கள் லீவு வேண்டும் . ஊரிலிருந்து எனது பெற்றோர்கள் வந்து இருக்கிறார்கள் என்றான். அவர் சிறிது நேரம் கழித்து சரி நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் . ராஜேஷ் நன்றி சார் என்று கூறிவிட்டு தனது இருக்கையை நோக்கி விரைந்தான் .

இரண்டு நாட்கள் கழித்து ராஜேஷ் வழக்கம் போல ஆபிசுக்கு சென்றான் . அப்போது மேனேஜர் அறையில் அவருடன் திவாகர் நின்று கொண்டே பேசிக் கொண்டிருந்தான் . அவன் முகத்தில் எந்தவித மாறுதலும் தெரியாமல் கையைக் கட்டிக் கொண்டு அமைதியாக மேனேஜர் கூறுவதை கவனித்து கொண்டு இருந்தான் . அவர் கையில் ஏதோ சில பேப்பர்கள் இருந்தது. ராஜேஷ் மனதிற்குள் ஏதோ ஒரு பெரிய விஷயம் நடக்கப் போகிறது , திவாகர் வசமாக சிக்கிக் கொண்டான் என்று நினைத்தான் . சிறிது நேரத்தில் கம்பெனியின் எம் டி ( M D ) திரு பரமானந்தம் வேகமாக வந்தார். உடனே மேனேஜர் எழுந்து அவரை வணங்கி , அவரின் இருக்கையில் எம் டி (M D ) யை அமர வைத்தார். பின்பு மூவரும் ஏதோ பேசிக் கொண்டனர் . சிறிது நிமிடங்கள் கழித்து திவாகர் அவனின் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான் . சுமார் அரை மணி நேரம் கழித்து மேனேஜர் ராஜேஷை போனில் அழைத்தார். சற்று குழப்பமுடன் அவனும் விரைந்து சென்றான் .

ராஜேஷ் உள்ளே சென்றதும் அங்கு ஆழ்கடல் அமைதியாய் மௌனம் நிலவியது . அவனுக்கு ஒன்றும் புரியவில்லை . சில நொடிகளுக்குப் பிறகு எம் டி ( M D ) சற்று குரலை உயர்த்தி ராஜேஷைப் பார்த்து நீ இந்த கம்பெனியில் எவ்வளவு வருடங்களாக வேலை செய்கிறாய். உனக்கு வெட்கமாக இல்லை, நீ செய்த காரியம் எவ்வளவு கேவலமான ஒன்று? எப்படி உனக்கு இவ்வாறு துரோகம் செய்ய மனம் வந்தது ? ராஜேஷ் சற்று அதிர்ச்சி அடைந்து , ஒன்றும் தெரியாதது போல என்ன சார் நடந்தது என்றவுடன் , அவர் நீ நடிப்பதை முதலில் நிறுத்து. எங்களுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது . அனைத்துக்கும் ஆதாரம் இருக்கிறது . இனியும் மறுத்தால் நான் உடனே போலீஸூக்கு தகவல் கொடுத்தால் உன் நிலை என்னவாகும் என்று யோசித்துப் பார். நான் இந்த வருடம் உனக்கு பதிவு உயர்வு அளித்து சம்பளம் அதிகமாக்காலம் என்று நினைத்திருந்தான் . எங்களுக்கு சந்தேகம் வந்தவுடன் நான் தான் திவாகரை இதை கண்டு பிடிக்க கூறினோம் . ஆனால் அவனை இதில் சிக்க வைக்க நீ நினைத்தாய் . திவாகரம் அந்தப் பணியை மிக சிறப்பாக செய்து முடித்தார். அதனால்தான் அவர் காலியில் சீக்கிரம் உங்களுக்கு முன்னால் ஆபிசுக்கு வந்து சில நாட்களாக உங்களை கவனிக்கத் தொடங்கினார். நமது கம்பெனி ரகசியங்களை எல்லாம் நகல் எடுத்து அடுத்தவருக்கு கொடுத்து நமக்கு வர வேண்டிய ஆர்டர்களை வரவிடாமல் செய்ததைக் கண்டு பிடித்துவிட்டோம் . வாட்ச்மேன் முருகனையும் பயன்படுத்தினோம். உண்மையில் நீ தான் அந்த டெண்டர் நகல்களை வெளியில் கொடுத்து பணம் பெற்றுக் கொள்வது அறிய முடிந்தது . அவர்கள் நாம் குறிப்பிட்ட தொடையை விட சற்றே குறைவாக கொடுத்து பல லட்சங்கள் நாங்கள் இழக்க வேண்டி இருந்தது . ஆனால் நீ அந்த காரியத்தை திவாகர் செய்வது போல திசை திருப்பினாய் . ஆனால் நாங்கள் விரித்த வலையில் நீ வசமாக சிக்கி விட்டாய். வாட்ச்மேன் முருகன் எங்களுக்கு அவ்வப்போது தகவல் தந்தார் . நீ ஒரு மூத்த ஊழியர் என்பதால் போலீஸில் கூறவில்லை . உடனைடியாக நீ ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டு வெளியில் போ . அனால் உனக்கு தண்டனையாக உனக்கு சேர வேண்டிய அனைத்து தொகையையும் நிறுத்த சொல்லிவிட்டேன் .

பல நாள் திருடன் ஒரு நாள் சிக்குவான் என்பது போல தான் வசமாக சிக்கிக் கொண்டதை நினைத்து பேரதிர்ச்சி அடைந்தான் . மனம் நொந்து கண்ணீர் விட்டான் . எவ்வளவோ கெஞ்சியும், எம் டி ( M D ) ஒப்புக் கொள்ளவில்லை . வேறு வழியின்றி தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தான் . மேனேஜர் ஒன்றும் தெரியாதது போல எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தார் . ராஜேஷ் தலை குனிந்து கொண்டே வெளியேறினான் . அந்தக் காலை நேரத்திலும் அவனுக்கு இருள்மயமாக தெரிந்தது , அவனின் எதிர்காலத்தைப் போன்று .

தவறுகள் செய்யும் போது பலரும் வருங்காலத்தைப் பற்றி நினைப்பது இல்லை. ஒரு மனிதனுக்கு பேராசை வரும்போது குற்றங்கள் செய்திட துணிகின்றனர். அவர்களுக்கு ராஜேஷ் வாழ்க்கை ஒரு பாடமாக அமையட்டும் . தேவை அதிகரிக்கும் போதும் ,மனதில் பொறாமை என்ற தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கும் போதும் தான் ஒருவருக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் . வாழ்க்கையில் பொறுமையும் உழைப்பும் இருந்தால் நிச்சயம் அதற்கேற்ற சன்மானமும் கிடைத்து மனதில் நிம்மதியும் திருப்தியும் நிலைத்து இருக்கும் .


பழனி குமார்
சென்னை

எழுதியவர் : பழனி குமார் (6-Jun-22, 8:18 am)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : peraasai
பார்வை : 249

மேலே