37 ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 37
ஆன்மீக வழியில் அமைதி
எழுத்தாளர் பூ.சுப்ரமணியன்

ஆன்மிகம் அனைவரையும் உறுதியாக நல்வழியில் நடத்திச் செல்லும். ஆன்மிகம் பற்றி நாம் மேடையில் மணிக்கணக்கில் பேசலாம். மற்றவர்களுக்கு நமக்குத் தெரிந்த ஆன்மிகம் பற்றி `விளக்கமாக சொல்லிக் கொடுக்கலாம். இராமாயணம், மகாபாரதம், திருவாசகம், பெரியபுராணம் போன்ற ஆன்மிகம் குறித்த புத்தகங்களைப் படித்து நாம் ஓரளவுக்கு அமைதி பெறலாம். ‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்று கூறுவதிலிருந்து திருவாசகத்தின் பெருமையை அறிந்து கொள்ளலாம். நாம் ஆன்மீகம் சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பதால் மட்டும் ஆன்மீகத்தில் முன்னேற்றம் கிடைக்குமா என்றால் ‘இல்லை’ என்றுதான் கூற வேண்டும்.

தியானம் செய்வது பற்றி படித்ததாலோ, கேட்டதாலோ அல்லது பேசினாலோ தியானத்தின் மூலம் கிடைக்கும் பலன் மற்றும் அனுபவம் மன அமைதி போன்றவை நமக்கு கிடைத்து விடாது. நமக்குப் பசி வந்தால் என்ன செய்ய வேண்டும். நமக்குப் பிடித்தமான உணவை சாப்பிட வேண்டும் என்று மற்றவர்கள் நம்மிடம் எடுத்துக் கூறிவிட்டால் நமது பசி அடங்கி விடுமா? நமக்குப் பசி வந்தால் உணவினை நாம் தயார் செய்துதான் சாப்பிட வேண்டும் என்பதை புத்தகத்தின் மூலம் படித்து தெரிந்து கொண்டால் நமது பசியானது நீங்கி விடுமா?

நமக்கு பசி வந்தால் உணவுக்குத் தேவையான பொருள்களை சேகரித்து தயார் செய்துதான் சாப்பிட வேண்டும். நாமோ மற்றவர்களோ தயார் செய்த உணவினை எடுத்து வைத்து நாம் சாப்பிட்டால்தான் நமது பசியானது நீங்கும். உணவை தயார் செய்வதற்கு அரைமணி நேரம்கூட ஆகலாம். அதுவரை நமது பசியினை பொறுத்துக் கொள்ள வேண்டும். உணவை தயார் செய்தபின் அதனை சாப்பிடுவதற்கு ஐந்து நிமிடம்தான் ஆகும். அதுபோல் ஆன்மிகம் பற்றி அறிய வேண்டுமெனில் தகுந்த ஒரு ஆன்மீக குருவை நாடிச்செல்ல வேண்டும்.

அவர் கூறும் ஆன்மீகக் கருத்துக்களை நமது மனதில் நன்கு பதிய வைத்துக்கொள்ள வேண்டும். மனதில் பதிய வைத்தபின் அதன்படி செயல்படுத்த வேண்டும். அதாவது ஆன்மீகப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டால்தான் நாம் ஆன்மீகத்தில் முன்னேற்றம் காணமுடியும். ஆன்மீகப் பயிற்சியின் மூலம் நாம் தேடும் விரும்பும் மன அமைதியை பெற முடியும். அதாவது தியானப்பயிற்சியின் மூலம் நமக்குள் ஓர் அனுபவம் ஏற்பட்டு மன அமைதியைப் பெறுவதற்கு முடியும். தியானத்தின் பலனையும் இனம்புரியாத ஒருவிதமான அனுபவத்தையும் உணர்ந்து அதனைப் பெறுவதற்கு முடியும்.

கல்லூரிகளில் தத்துவம் சம்பந்தமாக ஒரு பட்டப்படிப்பு உள்ளது. பெரும்பாலும் நன்கு வசதி படைத்தவர்கள் கல்லூரியில் சென்று படிப்பார்கள். அவர்கள் படிப்பது எதற்கு என்றால் கல்லூரியில் சென்று படித்து ஒரு பட்டம் வாங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக படிப்பார்கள். அவர்கள் படித்து தங்களது அறிவை பெருக்கிக் கொள்ள வேண்டுமென்றோ அல்லது அதன்மூலம் வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்ற நிலையில் அவர்கள் உயர்கல்வியை படிப்பதில்லை. மேலும் தங்களை சமூகத்தில் உயர்ந்த நிலையில் கல்வியில் பட்டம் எல்லாம் வாங்கியுள்ளார் என்று மற்றவர்கள் கருதவேண்டும் என்ற நோக்கத்தில் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்கள். அவர்கள் நோக்கமெல்லாம் ஒரு பட்டம் பெறுவதற்கு வேண்டும் என்ற நோக்கில்தான் படிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தேர்ந்து எடுப்பது பொருளாதாரம் அல்லது தத்துவம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். அவர்கள் தத்துவம் படிப்பதனால் மட்டும் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைவதற்கு முடியாது. ஏட்டுப்படிப்பு கறிக்கு உதவாது என்பதுபோல்தான் தத்துவப் பட்டப்படிப்பு மற்றும் பொருளாதாரம் படிப்பதும் ஆகும்.

சர்க்கரை என்று ஒரு காகிதத்தில் எழுதி அதை வாயில் போட்டு சுவைத்தால் இனிப்பின் சுவையை நாம் உணரமுடியுமா? உண்மையான சர்க்கரையை வாயில் போட்டால்தான் இனிப்பின் சுவையை பற்றி உணரமுடியும். அதுபோல்தான் ஆன்மீகத்தில் நாம் முன்னேற்றம் அடைய வேண்டுமெனில் ஆன்மீக குரு கூறும் தியானம் ஜபம் போன்ற பயிற்சிகளைத் தவறாமல் பின்பற்றி மன அமைதி மற்றும் ஆன்மீக முன்னேற்றம் பெறுவதற்கு வேண்டும். ஆன்மீகத்தின் நுழைவாயில் தியானம் என்று கூறலாம். மனதில் மன அழுத்தம் இருந்தாலோ வேறு ஏதோ ஒருவகையில் மனம் சஞ்சலப்பட்டாலோ தனிமையில் அமர்ந்து தியானம் செய்யும்போது மனம் மென்மையாகும்,

முதலில் நமக்கு ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். அதற்கு தவறாமல் சத்சங்கத்தை நாடுவததற்கு வேண்டும். ஆன்மீகத்தில் சத்விசாரம் செய்வதற்கு சத்சங்கம் மிகவும் உதவிகரமாக இருக்கும். சத்சங்கத்தில் நாள்தோறும் தவறாமல் கலந்து கொள்வதால் ஆன்மீக சிந்தனைகள் நம்மிடம் இயல்பாக ஏற்பட்டுவிடும். மன ஒருமைப்பாடு நம் மனதில் ஏற்பட்டு விடும். ஜீவவிசாரம், சிஷ்டி விசாரம், மகாவாக்கிய விசாரம், பலன் விசாரம் என ஆன்மீகத்தை ஞானிகள் வகைபடுத்தியுள்ளனர்.

ஜீவவிசாரம் என்பது ஜீவனுக்கும் ஆன்மாவுக்கும் என்ன உறவு மற்றும் நான் யார் என்பது குறித்த விசாரம் ஆகும். சிஷ்டி விசாரம் என்பது உலகம் எவ்வாறு உருவானது? உலகத்தை படைத்த சக்தி எது? என்பது குறித்த ஆழ்ந்த சிந்தனைதான் சிஷ்டி விசாரம் என்பதாகும். மகாவாக்கிய விசாரம் என்பது ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள உறவு என்பது பற்றிய விசாரம் ஆகும். இந்த ஆன்மீக விசாரங்களினால் என்ன பலன் ஏற்படும் என்பது பற்றி அறிவது உணர்ந்து கொள்வது பலன் விசாரம் ஆகும். ஆன்மீக விசாரங்களில் நமது மனம் ஆழ்ந்து ஈடுபடுவதினால் ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண முடியும். அதன் மூலம் ஆன்மீகத்தில் உண்மை நிலை அறிந்து மனம் அமைதி பெறும்.

ஆன்மீகத்தில் தத்துவ விவேகம் என்றால் என்ன? தத்துவம் என்றால் சத்தியம் அல்லது உண்மைப்பொருள், மெய் உணர்வு என்று ஆன்மிகம் கூறுகிறது. ஆன்மீகத்தில் விவேகம் என்றால் ஆன்மீக அறிவு ஆகும். ஆன்மீக அறிவு என்பது உண்மைநிலையைச் சரியாகப் புரிந்து கொள்வது ஆகும். சத்தியம் அசத்தியம் இரண்டும் கலந்தே உலகில் காணப்படுகிறது. சத்தியம் என்பது உண்மை. அசத்தியம் என்பது கானல்நீர் போன்றது. உலகில் காணப்படும் பொருள்களில் செயல்பாடுகளில் உண்மையும் பொய்யும் கலந்தே காணப்படுகிறது. அதனை நமது ஆன்மீக அறிவினால் அறிந்து கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக தூரத்தில் ஒரு கயிறு கிடப்பதைப் பார்த்து, அதனை நாம் பாம்பு என்று கருதி பயம் கொள்கிறோம். எனவே பயந்துகொண்டே நாம் அருகில் சென்று பார்த்த பிறகு அது பாம்பு இல்லை கயிறு என்று அறிந்தவுடன் மனதில் ஏற்பட்ட பாம்பு என்ற பயத்திலிருந்து விடுதலை அடைகிறோம்.

சத்தியம் என்பது உண்மை, அசத்தியம் என்பதை நாம் ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அதுவும் சத்தியம் என்று உணர முடியும். தூரத்தில் உள்ள கயிறு கிடப்பதைப் பார்த்து நாம் பாம்பு என்று நினைத்து பயம் கொள்கிறோம். உலகில் கயிறு என்பதும் உண்மை. அதேபோல் உலகில் பாம்பு என்பதும் உண்மை. சிலநேரங்களில் நமக்கு பாம்பு கூட தூரத்தில் இருந்து பார்க்கும்போது கயிறாகத் தோன்றலாம். நமது விவேகத்தின் மூலமாக உண்மை எது என்று உணர்ந்து கொள்ள முடியும்.

உண்மையான யானையைப்போல் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பெரிய யானைப்பொம்மையை பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். நமக்கு யானை தெரியாது மரம்தான் தெரியும். அதே யானைப்பொம்மையை ஒரு குழந்தையிடம் காட்டினால் யானை என்று நினைத்து பயப்படும். நமக்கு மரமாகத் தெரிவது குழந்தையின் கண்களுக்கு மனதுக்கு யானையாகத் தெரிகிறது. அறிவு தெளிந்த நமக்கு மரம் என்பது நமது பார்வையில் உண்மை. குழந்தையின் அறிவு தெளிவில்லாத காரணத்தால் மரம் யானையாகத் தெரிவது குழந்தையின் பார்வையில் உண்மையாகும். இதனைப் பற்றி திருமூலர் பத்தாம் திருமுறைப் பாடலில்,

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைத்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே

என்று விளக்கியுள்ளார். சிற்பியின் கை வேலைப்பாட்டினால் மரத்தை உணர முடியாமல் மறைத்து, மரத்தால் செய்யப்பட்ட பெரிய யானையின் தோற்றம், மக்களை அது மயக்குகிறது. ஆயினும் சிற்பியினது வேலைப்பாடுகளை அழித்து மரத்தினுள்ளே அது மறைத்து விட்டோமானால், அந்த மரயானையை இருந்த பொருள் அழியாதிருப்பினும் மரத்தினுள்ளே யானை மறைந்து விடுகிறது. அதுபோல, பரம்பொருளால் இயங்குகின்ற இந்த உலகம், ஆன்மா தோன்றிய காலத்தில் தானே சுதந்திரமாய் இயங்குவனாய் அதற்குக் காட்சியளிக்கும். ஆயினும் குருவருளால் ஞானத்தைப் பெற்ற முக்தி காலத்தில், உண்மை ஞானம் பொது ஞானத்தினை அழித்து விடுகிறது. அதனால் இந்த உலகம் சுதந்திரம் அற்றொழியப் பெரும் பொருளின் இயக்குதலே விளங்கி நிற்கும் என்பது பாடலின் பொருளாகும்.
(அமைதி தொடரும்)
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (6-Jun-22, 7:46 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 61

சிறந்த கட்டுரைகள்

மேலே