முடி துறந்தவன்

முடி துறந்தவன்

அடர்ந்த கானகத்தில் உள்ள ஒற்றயடி பாதையில் நடு இரவில் நிலா வெளிச்சத்தில்
குதிரை ஒன்று சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த இரவிலும், குதிரையின் மீது அமர்ந்திருந்தவன் விழிப்புடன் சுற்றும் முற்றும் பார்த்தவாறே, கடிவாளத்தை கையில் பிடித்த வண்ணம் குதிரையின் அசைவுகளை கட்டுபடுத்திக்கொண்டிருந்தான்.
சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த குதிரையின் மீது இருப்பவனுக்கு வயது இருபத்தி மூன்றிலிருந்து இருபத்தி ஐந்துக்குள் இருக்கலாம்.ஏதோ ஒரு முக்கிய நோக்கத்துக்காக சென்று கொண்டிருக்கிறான் என்பது அந்த நள்ளிரவில அவன் பிரயாணம் சென்று கொண்டிருப்பதை வைத்து நாம் ஊகித்துக்கொள்ளலாம்.
குதிரையின் ஓட்டத்தில் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே வந்தவன், சற்று தூரத்தில்
ஏதோ ஒரு அசைவை கண்டு குதிரையின் கடிவாளத்தை பிடித்து நிறுத்தினான்.ஒரே வேகத்தில் சென்று கொண்டிருந்த குதிரை கடிவாளத்தை பிடித்து நிறுத்தியதும் சற்று தடுமாறி தன் முன்னங்கால்களை சற்று அழுத்தி, வலித்தாலும் இரகசிய பயணத்திற்கு அனுபவப்பட்ட அந்த குதிரை மெல்லிய முனகலுடன் நின்றது.
குதிரையிலிருந்து மெல்ல கீழே குதித்தவனை சற்று உற்றுப்பார்த்தால் அவனது வளர்த்தி கூட ஆறடிக்கு குறையாமல் இருந்தது. அவன் அந்த குதிரையிலிருந்து குதித்த பொழுது சிறு சத்தம் கூட வாராமல் இருந்ததால் நிச்சயம் அவன் கைதேர்ந்த வீரனாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் குதித்தவுடன் தன் கால்களை தரையில் ஊன்றி நடந்த தோற்றம்,
அவன் கால்களின் தசை நார்கள் இறுக்கத்துடன் இருந்த தோற்றம் இவைகள் இவனை ஒரு தேர்ச்சி பெற்ற வீரன் என காட்டின.
தன் குதிரையை மெல்ல தட்டிக்கொடுத்து நடை போட்டவன் பாதையை விட்டு விலகி
அங்கிருந்த மரக்கிளையை மெல்ல ஒதுக்கி குதிரை மறைந்து கொள்ள இடம் செய்து கொடுத்தான்.குதிரை வெளியில் தெரிய வாய்ப்பில்லை என்று முடிவு செய்து கொண்டவன்
இப்பொழுது சத்தம் வந்த இடத்தை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தான்.
சிறு நெருப்பு வெளிச்சத்தை சுற்றி பத்திருபது பேர் அமைதியாக உட்கார்ந்து இருந்தனர். ஐந்து நிமிடங்கள் அமைதியாக இருந்த அந்த இடத்தில் கூட்டத்தில் உட்கார்ந்திருந்த ஒருவன் மெல்ல கனைத்து எல்லோரும் வந்து விட்டீர்களா?
மற்றொருவன் எழுந்து எல்லோர் தலைகளையும் எண்ணி அவரவர் பெயர்களையும் மனதுக்குள் முணு முணுத்துக்கொண்டு எல்லோரும் வந்து விட்டார்கள். சொல்லிவிட்டு அவனும் கீழே உட்கார்ந்து கொண்டான்.
முதலில் பேச ஆரம்பித்தவன் எழுந்து நின்று தன் கையை நீட்டி “நாம் எல்லோரும் ஒரு இலட்சியத்துக்காக இங்கு கூடியிருக்கிறோம்”அந்த இலட்சியம் முடியும் வரை ஓய் மாட்டோம்” சொல்லி முடிக்குமுன், ஒவ்வொருவராக இதே போல் எழுந்து உறுதி மொழியை சொல்லிவிட்டு கீழே உட்கார்ந்தனர்.இப்பொழுது முதலாமவன் பேச ஆரம்பித்தான்.
கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக நாம் பாடுபட்டுக்கொண்டிருந்த நம்முடைய லட்சியம் இறுதி கட்டத்தை அடைந்து விட்டது.
எப்பொழுது முடியும்?
நம்முடைய தலைவர் அடுத்த மாதம் இந்த நாட்டு மன்னன் ஆகும்போது முடியும்.
அது எப்படி? நாம் இவர்களுடன் போர் புரியாமல் முடியும்.
ஒன்றை புரிந்து கொள், இது நியாயமாக நம் தலைவருக்கு கிடைக்க வேண்டிய அரசு பதவி,
இந்த மன்னன் நம் தலைவருக்கு சகோதரன் ஆனாலும், தலைவருக்கு கிடைக்கவேண்டிய பதவியை பறித்தவன், அது மட்டுமல்ல, இந்த மன்னனுக்கு பொது மக்களின் ஆதரவும் இருக்கிறது.. அப்படி நாம் இந்த நாட்டின் மீது போர் தொடுத்தால் நமக்கு உதவுபவர்கள் யார்?
அதனால்தான் நம் தலைவர் மூன்று வருடங்களாக காத்திருந்து இந்த வெற்றியை
அடையப்போகிறார்.நாம் பதினைந்து பேரும் அவருக்கு அப்பொழுது உற்ற துணையாக இருக்க வேண்டும். நம்முடைய தலைவர் இந்த நாட்டு அரசராக பதவியேற்றதும் முதல் பரிசு
நம் கூட்டத்திலுள்ளவர்களுக்குத்தான்.
ஆஹா…ஆஹா… சத்தமிட்டு கொண்டாடியவர்களை உஷ்…சத்தமிடாதீர்கள். என்று அடக்கினான்
இதுவரை பேசியவன்.
இரவு ராணி அரசரிடம் தன் மகனை பற்றி புகார் கூறிக்கொண்டிருந்தாள். எப்பொழுதும் பூஜை,புனஸ்காரம் என்று சிவனே என்றிருந்தவனை இளவரசு பட்டம் சூட்டினாலும் சூட்டினீர்கள், அவன் அதற்கப்புறம் வீட்டில் தங்குவதே இல்லை. இப்பொழுது கூட பாருங்கள் அவன் அறைக்கு அவனை பார்க்க சென்றிருந்தேன். அவனை காணோம், பணிப்பெண்களை கேட்டால் வெளியே சென்று வருவதாக சென்றானாம். என்ன வேலை இருந்தாலும் இரவு அரண்மனைக்கு வந்து விட வேண்டும் என்று சொல்லி வையுங்கள்.சொல்லி வைக்கிறேன், ஏதோ யோசனையில் சொல்லிக்கொண்டிருந்த மன்னரை உலுக்கி, நான் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறேன், நீங்கள் என்ன யோசித்து கொண்டு இருக்கிறீர்கள்.
இல்லையில்லை, நீ சொன்னது புரிந்தது, நாளை இந்த நாட்டை ஆள்பவனல்லவா,ஒரு சில வேலைகள் இருக்கும், இருந்தாலும் நீ சொன்னதை கண்டிப்பாக சொல்லி வைக்கிறேன்.
சேவகன் ஒருவன் வந்து மன்னரின் காதில் ஏதோ சொல்கிறான், நீ போ நான் வருகிறேன்.
இளவரசர் மன்னரிடம் அப்பா நீங்கள் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்த கூட்டத்தை,
இன்று கண்டு பிடித்து விட்டேன்.
அப்படியா மிக்க மகிழ்ச்சி ! என்ன செய்தாய் அவர்களை?
கைது செய்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளேன். நாளை அரண்மனை சபை கூட்டத்திற்கு அவர்களை கொண்டு வருகிறேன்.
அரண்மனை சபை நடந்து கொண்டிருக்கிறது. இளவரசன் எழுந்து மன்னா நம் நாட்டை ஒழிக்க நினைத்து செயல்பட்டுக்கொண்டிருந்த ஒரு கூட்டத்தை கைது செய்திருக்கிறேன்.
தாங்கள் அனுமதி கொடுத்தால் அவர்களை இந்த சபைக்குள் கொண்டு வந்து உங்கள் முன்னால் நிறுத்துகிறேன்.
தாராளமாக கொண்டு வா.
சபைக்குள் உட்கார்ந்திருந்த அறிஞர்கள் பார்த்துக்கொண்டிருக்க, இளவரசர் தன் வீர்ர்களுக்கு கண் ஜாடை காட்டுகிறார்.
சபைக்குள் கை விலங்குடன் உள்ளே நுழைந்த பதினைந்து பேரை பார்த்தவர்கள் இவர்களா
நாட்டை அழிக்க நினைத்தவர்கள் என்று ஆச்சர்யப்பட்டனர்.
உப தளபதி, அரசரின் மெய்க்காப்பாளர்கள், அரண்மனை சேவகர்கள், என்று யாரெல்லாம்
இந்த நாட்டுக்கு நம்பிக்கையானவர்கள் என்று நினைத்தோமோ, அவர்களே கைதிகளாய் நிற்பதை பார்த்த சபையோர் எதுவும் பேசாமல் திக் பிரமையில் இருந்தனர்.
இவர்கள் தான் நம் நாட்டுக்கு எதிராக வேலை செய்தவர்கள் என்று எப்படி கண்டு பிடித்தாய்?
மன்னா நானே நேற்று இரவு இவர்களை கண்காணித்து கையும், மெய்யுமாக பிடித்து வந்தேன்.
சரி இவர்களை என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய்?
அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். புன் முறுவல் பூத்தான் இளவரசன்.
வேண்டாம் நீயே என்ன தண்டனை என்று சொல்லி விடு. மன்னர் பின் வாங்கினார்.
சபையோர் மன்னர் இவர்களா நாட்டுக்கு துரோகம் செய்திருப்பார்கள்? என்று மனம் கலங்கி விட்டதாக நினைத்தனர். அதனால் இவர்களுக்கு தண்டனை தர தயங்குகிறார் என்று முடிவு செய்தனர்.
இளவரசர் மெல்ல எழுந்து இவர்களை தூண்டி விட்டவரும் இந்த அரண்மனையில் இருக்கிறார். அவரையும் தண்டிக்கவேண்டும்.
இந்த அரண்மனை சபையிலா?
ஆம், புன் முறுவல் பூத்த இளவரசன் மன்னனை பார்க்க, மன்னர் சிரித்துக்கொண்டே யார் அந்த துரோகி?
இளவர்சன் நீங்கள்தான் மன்னா?
மன்னரா ! ஆச்சர்யத்துடன் வாய் பிளந்து நின்றனர் சபையோர்
ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடையாதீர்கள் சபையோர்களே ! என் தந்தையான மன்னர் நான்
இறைவனை பற்றி ஆடல் பாடல்களிலும், கலைகளிலும் பொழுதை போக்கி கொண்டிருப்பதாக நினைத்தார். என்னை நாட்டின் மேலான்மையின் பக்கம் கவனைத்தை திருப்ப எனது தந்தையாகிய மன்னரும், இந்த அருமை சகோதரர்களும் ஆடிய நாடகமே இது.
மற்றபடி இவர்கள் அனைவருமே இந்த நாட்டின் மீது பற்றும் பாசமும் கொண்டவர்கள்தான்.அவர்களின் கை விலங்குகளை நானே அகற்றுகிறேன்.
அவர்களை “அணைத்து” என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் உங்களை அவமானப்படுத்த வேண்டும் என்று இந்த சபைக்கு அழைத்து வரவில்லை, எதிர்காலம் உங்களை தவறாக சொல்லி விடக்கூடாது என்ற எண்ணத்திலே இதை செய்தேன்.
இப்பொழுது இளவரசர் அந்த சபையோரை நோக்கி என் மனம் இறை வழிபாட்டில் தான் நாட்டம் கொண்டுள்ளது, அதனால் நான் இன்றிலிருந்து இளவரசு பட்டத்தை துறக்கிறேன். என் தந்தை இந்த நாட்டை நிர்வகிக்கும் வாழ்க்கைக்கு என்னை இழுக்க, இந்த நாடகத்தை நடத்தினார். அவருக்கு மகன் என்ற முறையிலும், மன்னனாக கூடிய தகுதி படைத்தவன் என்ற முறையில் சபையோருக்கு நிருபித்து காட்டி விட்டேன்.
ஆனால் என் மனம் இறை வழி பாட்டிலே செல்வதால் இன்றிலிருந்து இந்த
வாழ்க்கையை துறந்து செல்கிறேன். என்னை மன்னரும், மகாராணியும், சபையோரும் மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இளவரசர் தன்னுடைய உடைமைகள் அனைத்தையும் சபை முன் கழற்றி வைத்துவிட்டு மெல்ல நடந்து வெளியேறியதை மன்னர் உட்பட அனைவரும் பிரமையுடம்
பார்த்துக்கொண்டிருந்தனர்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (8-Jun-22, 3:36 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 81

மேலே