நுண்ணூல் உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப் புணர்தல் நிரயத்துள் ஒன்று – நாலடியார் 233

நேரிசை வெண்பா

நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் - நுண்ணூல்
உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
புணர்தல் நிரயத்துள் ஒன்று 233

- கூடாநட்பு, நாலடியார்

பொருளுரை:

நுட்ப உணர்வுடையாரோடு கலந்து பழகி யின்புறுதல் விண்ணுலகத்தின் இன்பமே போலும் விரும்பப்படும் மேன்மையினையுடையது;

நுண்ணிய நூலுணர்வும் இல்லாதவராகிய பயனிலாரொடு நேயங் கொள்ளுதல் நரகத்திற் சேர்தலை ஒக்கும்.

கருத்து:

கல்வியும் அறிவுமில்லாத கூடாநட்பினரோடு சேர்தலாகாது.

விளக்கம்:

நுண்ணுணர்வென்று ஒன்றிலும் நுண்ணூலுணர்வென்று மற்றொன்றிலும் விதந்தமையால், ஈரிடத்தும் இரண்டுங் கொள்க. என்னை? இரண்டும் இயைந்தன்றி மாட்சியுறாமையின் என்க. நூலுணர்வும் இலராகிய வென இழிவு சிறப்பும்மை தொக்கு நின்றது, கல்வியும் அறிவுமுடையாரை விண்ணுலகின்பம் உடையராகவே கருதுமியல்பு, இந்நூலுள் முன்னும்"1 வந்தது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Jun-22, 10:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே