வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே அம்பலம் தாழ்க்கூட்டு வார் - பழமொழி நானூறு 135

நேரிசை வெண்பா

தெரியா தவர்தம் திறனில்சொல் கேட்டால்
பரியாதார் போல இருக்க - பரிவில்லா
வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே
அம்பலம் தாழ்க்கூட்டு வார். 135

- பழமொழி நானூறு

பொருளுரை:

அறிவில்லாருடைய (அவர் தம்மை இகழ்ந்து கூறும்) திறமையில்லாச் சொற்களைக் கேட்டால் துன்புறாதவர்களைப் போல் பொறுத்திருக்க! (அங்ஙனமன்றி) அன்பில்லாத அயலார் வாயை அடக்கப் புகுவார்களோ? இல்லை, புகுவரேல், பொது இடத்தைத் தாழ் இடுவாரோடு ஒப்பார்.

கருத்து:

அறிவில்லாருடைய வாயை அடக்குதல் முடியாது.

விளக்கம்:

அறியார் தமது அறிவின்மையைப் புலப்படுத்துகின்றார் என்று அறிவதல்லது அவர் கூறும் சொற்களுக்காக வருந்துதல் கூடாது. பொது இடத்தினைத் தாழிட இயலாதவாறு போல, அவர் வாயை அவித்தல் இயலாது போம்.

'அம்பலம் தாழ்க் கூட்டுவார்' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jun-22, 5:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே