பிணிமூப்பு அருங்கூற்று உடனியைந்து துஞ்சு வருமே துயக்கு - பழமொழி நானூறு 137

நேரிசை வெண்பா

தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்
ஆற்றும் துணையும் அறஞ்செய்க - மாற்றின்றி
அஞ்சும் பிணிமூப்(பு) அருங்கூற்(று) உடனியைந்து
துஞ்சு வருமே துயக்கு. 137

- பழமொழி நானூறு

பொருளுரை:

அறிவின் மயக்கம் அஞ்சத் தகும் நோய், மூப்பு, அருங்கூற்று என்ற இவைகளுடன் சேர்ந்து தடையில்லாது இறந்துபடுமாறு வந்து சேரும். ஆதலால், தோன்றுதற்கு அருமையாகிய இம் மக்கள் பிறப்பைப் பெற்றதனால் முடிந்த வகையால் அறவினையைச் செய்க.

கருத்து:

ஒவ்வொருவரும் தத்தமக்கு இயலுமாற்றான் அறம் செய்க.

விளக்கம்:

'தோற்றம் அரிதாய மக்கள்' என்றது மானிடராதலின் அருமையை உணர்த்திற்று. 'கடவுள் படைப்பிற்குப் பெருமை தரவல்ல படைப்பு, நேர்மையுள்ள மனிதன்தான்,' என்பது மேனாட்டாசிரியர் போப் அவர்களின் கூற்று.

'துஞ்ச வருமே துயக்கு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jul-22, 7:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே