சிற்றுயிரைச் சீரழிக்காதீர்

சிற்றுயிரைச் சீரழிக்காதீர்கள்
=========================
சின்னஞ் சிறுமியரைச் சீரழித்து நித்தம்
சேற்றில் எறிவோரே சிந்திக்க வாரீர்
வன்மத் தீயினிலே வாட்டுகின்றக் காமம்
வாழ்வைக் கரிக்கின்ற வஞ்சகத்தைக் கேளீர்
கன்னிப் பருவமதைக் காணாத மொட்டின்
கழுத்தை அறுக்கின்ற காமுகரே பாரீர்
என்னை விடுங்களென இறைஞ்சுகின்ற பிஞ்சை
எப்படி மனசார இம்சிப்பீர் கூறீர்
*
தாயாய் மங்கையரைத் தாங்குகின்ற மண்ணில்
தாரமாய் வாய்ப்பவளும், தங்கையரும் மற்றும்
நோயால் வீழ்கின்ற நொடிதன்னில் தாங்கும்
நூதன முமாவோரை நோகவிட லாமோ
நாயாய் அலைகின்ற நயவஞ்சப் பேயீர்
நாளை உனக்கான நாயகியாள் ஈயும்
சேயும் பெண்ணென்றே சிந்தித்துப் பார்த்து
சிற்றுயிரை இனியேனும் சீரழிக்கா தீரே
*
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-Jul-22, 2:02 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 17

மேலே