புலம்புகின் தீநாய் எழுப்புமாம் எண்கு - பழமொழி நானூறு 139

இன்னிசை வெண்பா

பெரியாரைச் சார்ந்தார்மேல் பேதைமை கந்தாச்
சிறியார் முரண்கொண்(டு) ஒழுகல் - வெறியொலி
கோநாய் இனம்வெரூஉம் வெற்ப! புலம்புகின்
தீநாய் எழுப்புமாம் எண்கு. 139

- பழமொழி நானூறு

பொருளுரை:

வெறியாட்டெடுக்கும் ஒலியைக் கேட்டு ஓநாய்க் கூட்டங்கள் அஞ்சுகின்ற மலைநாட்டை யுடையவனே!

வலிமையிற் சிறியவர்கள் வலிமையால் பெரியோர்களைச் சார்ந்து நிற்பவர்களிடம் அறியாமையையே பற்றுக் கோடாகக் கொண்டு, மாறுபாடு கொண்டு ஒழுகுதல்,

தீய நாய் நாட்டில் புகுந்தால் உறங்குகின்ற கரடியை எழுப்புகின்றதை ஒக்கும்.

கருத்து:

வலியாற் பெரியார் மீது மாறுபட்டு நிற்றலை ஒழிதலேயன்றி அவரைச் சார்ந்தார் மீதும் அங்ஙனமே யாகுக என்றது இது.

விளக்கம்:

வலியாற் பெரியார்க்குள்ளன அவரைச் சார்ந்தொழுகுவார்க்கும் உள்ளதால் அவரிடத்தும் மாறுபட்டு நிற்றலையொழிக என்பது; ஒழுகல் என்பது மகனெனல் என்றாற் போன்று எதிர்மறைப் பொருளில் நின்றது.

தனக்கே தீங்கு விளைத்துக் கோடலின் தீ நாய் எனப்பட்டது; சிறியார் பெரியாரைச் சார்ந்தார் மீது மாறுபட்டு நிற்றல் தமக்குத் தாமே தீங்கினை விளைவித்துக் கொள்வதாக முடியும்.

'புலம்புகின் தீநாய் எழுப்புமாம் எண்கு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jul-22, 3:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே